India

நீச்சல் குளத்தில் ரஷ்ய சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. கோவா சொகுசு விடுதியில் நடந்த கொடூரம்!

இந்தியாவில் மிகவும் பிரபலமான சுற்றுதலாத் தளங்களில் கோவாவும் ஒன்று. இங்கு இந்தியர்களைக் காட்டிலும், வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் அதிகமாக வருவது உண்டு. எல்லா சுற்றுத் தளங்களிலும் பொதுமக்களின் வசதிக்காக தங்கும் விடுதிகள் இருக்கும். அப்படி கோவாவிலும் ஏராளமான தங்கும் விடுதிகள் அமைந்துள்ளது.

வடக்கு கோவாவில் அமைந்துள்ள ஆரம்போலில் பெரிய சொகுசு விடுதி ஒன்றில், ரஷ்யாவை சேர்ந்த ஒரு பெண் தனது 12 வயது மகளோடு தங்கியிருந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த ரஷ்ய பெண் தனது மகளை விடுதியிலேயே விட்டுவிட்டு, அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது அந்த விடுதியில் அறை உதவியாளராக பணிபுரிந்த ரவி என்பவர், சிறுமி தனியாக இருப்பதை அறிந்து அவரிடம் அத்துமீறி உள்ளார்.பின்பு அந்த சிறுமியை நீச்சல் குளத்திலும், அறைக்குள்ளும் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு , பின்னர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

பின்னர் சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்றுவிட்டு விடுதிக்கு திரும்பிய தாய், தன் மகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். மகளிடம் என்ன நடந்தது என்பதை கேட்டுவிட்டு, அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரைத் தொடந்து கோவா போலிஸார் நடத்திய விசாரணையில் குற்றவாளி அவரது சொந்த ஊரில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து குற்றவாளி ரவி லமாணி கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்றும், அவருக்கு சமீபத்தில் தான் திருமணம் ஆகியுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்திலேயே பெர்னம் போலிஸார் ரவி சொந்த ஊரான கடக் நகரில் வைத்து கைது செய்துள்ளனர்.

மேலும் பிரஸ் டிரஸ்ட் ஆஃப் (PTI) இந்தியாவிடம் பேசிய பெர்னெம் காவல் நிலைய ஆய்வாளர் விக்ரம் நாயக், குற்றவாளி ரவி லமானி மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை ), கோவா குழந்தைகள் சட்டத்தின் பிரிவு 8 மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார் . மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மிகப்பிரபலமான சுற்றுலாத் தளமான கோவாவில் நடந்த இப்படியொரு சம்பவத்தால், அங்கு மிகவும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளும் அச்சத்தில் உள்ளனர்.

Also Read: தாலி கட்டும் நேரத்தில் மணமகனுக்குக் காத்திருந்த அதிர்ச்சி.. விஷம் அருந்திய மணமகள்: காரணம் என்ன?