India
“ரயில் தண்டவாளத்தில் நாட்டு வெடிகுண்டை பதுக்கி வைத்த ரவுடி கும்பல்” : பகீர் கொலை திட்டம் - பின்னணி என்ன?
புதுச்சேரி மாநிலத்தில் ரவுடிகளுக்குள்ளான மோதலின்போது சர்வ சாதாரணமாக நாட்டு வெடிகுண்டுகளை வீசி பழிதீர்க்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. சமீபத்தில் நடந்த பெரும்பாலான கொலைகள் இதுபோல் நடந்து இருப்பதே சாட்சிகளாக உள்ளன.
இந்நிலையில், காராமணிக்குப்பம் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் இரவு நாட்டு வெடிகுண்டு ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அந்த பகுதி மக்கள் உடனடியாக உருளையன்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
அப்போது அங்கு ரெயில்வே தண்டவாளத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறிய துகள்கள் கிடந்தது. மேலும் அங்கு மற்றொரு நாட்டு வெடிகுண்டை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. உடனே போலிசார் இது குறித்து வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு விரைந்து வந்து அந்த வெடிகுண்டை பத்திரமாக சேகரித்தனர். பின்னர் அதனை மணல், மரத்தூள் நிரப்பி வைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் வாளியில் வைத்து பத்திரமாக அப்புறப்படுத்தினர். தொடர்ந்து அங்கு வேறு ஏதாவது நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா? என தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் வேறு எதுவும் கிடைக்கவில்லை.
இதனிடையே சென்னை - புதுச்சேரி ரயில் வருவதற்கு சற்று நேரத்துக்கு முன்பு தான் காராமணிக்குப்பம் ரெயில்வே தண்டவாளத்தில் குண்டு வெடித்துள்ளது. வெடிக்காத மற்றொரு குண்டும் கைப்பற்றப்பட்டுள்ளது. அப்படியானால் இந்த ரெயிலை குறி வைத்து அங்கு தண்டவாளத்தில் குண்டு பதுக்கி வைக்கப்பட்டதா? அல்லது தண்டவாளத்தை தகர்க்கும் நோக்கத்தில் குண்டு வைக்கப்பட்டதா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலிசார் விசாரித்து வருகிறார்கள். ரவுடிகள் தங்கள் எதிரிகளை தீர்த்து கட்டுவதற்காக தண்டவாளத்தில் நாட்டு வெடிகுண்டை பதுக்கி வைத்து இருந்தார்களா? என்பது குறித்தும் போலிஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் கொசப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரிஷி, பெரியார் நகர் கவுதம், அரவிந்த், கவியரசன் ஆகிய 4 பேரை உருளையன்பேட்டை போலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!