India

லக்கிம்பூர் வழக்கு: “ஒரு வாரத்தில் சரணடைய வேண்டும்..” - ஆஷிஷ் மிஸ்ராவிற்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் கண்டித்து கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதியிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது, கார் ஒன்று விவசாயிகள் கூட்டத்திற்குள் புகுந்து சென்றது. இந்தச் சம்பவத்தில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூரச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா சென்ற கார்தான் விவசாயிகள் மீது ஏற்றிச் சென்றது என விவசாயிகள் குற்றம்சாட்டினர். இதையடுத்து ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்தியா முழுவதும் போராட்டம் வெடித்தது. பின்னர் உத்தர பிரதேச போலிஸார் ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில், ஜாமீன் வழங்கக் கோரி ஆஷிஷ் மிஸ்ரா அலகாபாத் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி விசாரித்த நீதிபதிகள் அவருக்கு ஜாமீன் வழங்க உத்தரவிட்டனர்.

இதையடுத்து ஆஷிஷ் மிஸ்ராவிற்கு வழங்கப்பட்டுள்ள அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி உயிரிழந்த விவசாயியின் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான சிறப்பு அமர்வில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஆஷிஷ் மிஸ்ராவின் ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்து இன்று உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஒரு வாரத்திற்குள் ஆஷிஷ் மிஸ்ரா காவல்நிலையத்தில் சரணடைய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த உத்தரவால் ஆஷிஷ் மிஸ்ரா விரைவில் சரணடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்றிய அரசு கொண்டு வர நினைத்த விவசாய விரோத வேளாண் சட்டத்தைக் கண்டித்து இந்தியா முழுவதும் விவசாயிகள் வீரியமிக்க போராட்டத்தை நடத்தினர். மேலும் வேளாண் சட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக பிரதமர் மோடியை விவசாயிகள் பேசவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ”நீங்களும் உண்மையை பேச மாட்டீங்க..” கொரோனா மரணங்களை மூடி மறைத்த மோடி அரசு.. அம்பலப்படுத்திய ராகுல்காந்தி!