India

“மாணவிகள் சொன்னதைக் கேட்டு கலகலவென சிரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்” : டெல்லி மாதிரி பள்ளியில் ருசிகரம்!

தலைநகர் டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று டெல்லியில் உள்ள மேற்கு வினோத் நகரில் உள்ள டெல்லி அரசு மாதிரி பள்ளியைப் பார்வையிட்டார்.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் டெல்லி மாதிரி பள்ளியின் வளர்ச்சி குறித்த குறும்படத்தையும் பார்வையிட்டதோடு, அப்பள்ளி மாணவர்களிடம் கலந்துரையாடினார். பின்னர், அப்பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்ட பொருட்களை பார்வையிட்டுப் பாராட்டினார்.

மாணவிகள் இருவர் தாங்கள் விற்பனை செய்யும் பாரம்பரிய ஓவிய வேலைப்பாடுமிக்க ஃப்ரேம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் விளக்கினர்.

அதுகுறித்து அந்த மாணவிகள் கூறுகையில், ரூபாய் நான்காயிரத்தை முதலீடு செய்து இதைத் தொடங்கி ரூ. 1 லட்சத்து ஐம்பதாயிரம் வருமானம் ஈட்டியுள்ளதாகவும், தாங்கள் 25 பேரிடம் ஓவியங்களை பெற்றதாகவும், அவர்களில் மூவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தனர்.

மாணவிகள் கூறியதைக் கேட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட அனைவருமே கலகலவெனச் சிரித்தனர்.

அங்கு ஒரு குழுவைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது தயாரிப்பான காபி பொடி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் விளக்கினர். பின்னர், “டேஸ்ட் செய்து பார்க்கிறீர்களா?” என மாணவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டனர்.

அதற்கு அவர் சிரித்தபடி வேண்டாம் எனக் கூறி அங்கிருந்து நகர்ந்தார். இதனால் அங்கு குழுமியிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.

Also Read: “எல்லாத் துறைகளை விடவும் இதற்குத்தான் முக்கியத்துவம் தருவேன்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னது என்ன?