India

ஹோலி பண்டிகையன்று சிறுமியை நரபலி கொடுக்க கடத்திய கும்பல்.. அதிரடியாக மீட்ட போலிஸ் : நடந்தது என்ன?

உத்தர பிரதேச மாநிலம், சிஜார்சி கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரை கடந்த மார்ச் 13ஆம் தேதியிலிருந்து காணவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

இந்த புகார் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து கிராம மக்களிடம் சிறுமி குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது சிறுமியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த சோனு பால்மிகி மற்றும் அவரது நண்பர் நீத்து ஆகியோர் மீது போலிஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதையடுத்து இருவரிடமும் போலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். இதில், சோனு பால்மிகிக்கு நீண்ட நாட்களாகத் திருமணமாகவில்லை. இதனால் நண்பர் நீத்துவுடன் சேர்ந்துகொண்டு சதேந்திரா என்ற மந்திரவாதியைச் சந்தித்துள்ளனர்.

அப்போது அவர், ஒரு மனித உயிரை நரபலி கொடுக்க வேண்டும் எனk கூறியுள்ளார். இதனால் சிறுமியைக் கடத்தி ஹோலி பண்டிகையன்று நரபலி கொடுப்பதற்காக வீட்டில் அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர், சோனு பால்மிகி, நீத்து ஆகிய இருவரையும் போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் விரைந்து நடவடிக்கை எடுத்து சிறுமியை மீட்ட போலிஸாருக்கு காவல்துறை ஆணையர் அலோக் சிங் பாராட்டு தெரிவித்து ரூ.5,000 வெகுமதி வழங்கியுள்ளார்.

Also Read: “இது காலா இல்ல.. சாவியா..?’ - போலிஸாரையே அசரவைத்த ROYAL ENFIELD கொள்ளையன்!