India

"மற்றவர்களுக்கும் ஜாமின் கிடைக்க வாய்ப்பு” - பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் சொல்வது என்ன?

பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை தொடர்ந்து இதே வழக்கில் சிறையில் உள்ள மற்றவர்களுக்கும் ஜாமின் வழங்கப்பட வாய்ப்புள்ளது என பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் தனக்கு ஜாமின் வழங்கக் கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில், பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்க ஒன்றிய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இருதரப்பு வாதங்களையும் விசாரித்த உச்சநீதிமன்றம், பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளதால் ஜாமின் வழங்கப்படுகிறது என்றும், ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் மாதந்தோறும் பேரறிவாளன் ஆஜராக வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பரோலில் இருந்தபோது பேரறிவாளன் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என்பதையும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு, “வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்பது நீதிமன்றத்தின் நிலைப்பாடாக உள்ளது.

ஆனால், வழக்கை இறுதி விசாரணைக்கு எடுக்க ஒன்றிய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை தொடர்ந்து இதே வழக்கில் சிறையில் உள்ள மற்றவர்களுக்கும் ஜாமின் வழங்கப்பட வாய்ப்புள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: பேரறிவாளனுக்கு ஜாமின்... ஆளுநரின் செயலால் அதிருப்தி - உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன?