India

ஒரேயொரு மிஸ்டு காலில் உறவை வளர்த்து பணம் பறிப்பு: அந்தரங்க படங்களை காட்டி மிரட்டியவர் சிக்கியது எப்படி?

கர்நாடகாவின் விஜயபுர மாவட்டத்தைச் சேர்ந்தவர் 31 வயதான பிரசாந்த். இவர் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வருவதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த பிரசாந்த் உத்தேசமாக சில பெண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தும், சேட்டிங் செய்தும் பழகி பின்னர் அவர்களை மிரட்டி பணம் பறிப்பதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்.

ஆனால் பிரசாந்தின் இந்த வேலைகள் பெங்களூருவைச் சேர்ந்த பெண்ணிடம் எடுபடாமல் போயிருக்கிறது. அதன்படி சில மாதங்களுக்கு முன்பு வழக்கம் போல ஒரு எண்ணுக்கு தொடர்ந்து பிரசாந்த் மிஸ்டுகால் கொடுத்திருக்கிறார்.

இதனால் கோபமடைந்த பெங்களூருவைச் சேர்ந்த அந்த பெண், பிரசாந்தை அழைத்து திட்டித் தீர்த்திருக்கிறார். மறுமுணையில் இருந்த பிரசாந்த் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

இதனையடுத்து அந்த பெண்ணின் நம்பிக்கையை பெறுவதற்காக நட்பாக பழகி வந்திருக்கிறார். காலப்போக்கில் இருவரும் காதல் வயப்பட்டிருக்கிறார்கள்.

பின்னர், பெண்ணை திருமணம் செய்துக் கொள்வதாகவும் உத்தரவாதம் அளித்த பிரசாந்த் அவரது அந்தரங்க புகைப்படங்களை அனுப்பும்படியும் கேட்டிருக்கிறார். அந்த பெண்ணும் திருமணம் செய்துக்கொள்ளும் எண்ணத்தில் பிரசாந்திற்கு படங்களை அனுப்பியிருக்கிறார்.

படங்கள் கிடைத்ததும் பிரசாந்த் வேலையை காட்ட தொடங்கியிருக்கிறார். அதன்படி அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் எனக்கு பணம் தர வேண்டும் எனக் கேட்டு அப்பெண்ணை மிரட்டியிருக்கிறார்.

மேலும் அந்த பெண்ணின் ஃபேஸ்புக் பாஸ்வேர்டை வாங்கி அதில் ஒரு படத்தை பதிவேற்றிய பிரசாந்த் அதனை நீக்க வேண்டுமானால் 7,000 ரூபாய் அனுப்பச் சொல்லியிருக்கிறார்.

இப்படியாக 50,000 ரூபாய் வரை பிரசாந்த் அந்த பெண்ணை மிரட்டி வாங்கியிருக்கிறார். இதனால் நொந்துப்போன அந்த பெண் பெங்களூரு சைபர் க்ரைம் பொருளாதார போலிஸாரை நாடி புகார் தெரிவித்திருக்கிறார்.

இந்த புகாரை அடுத்து பிரசாந்தை கடந்த வெள்ளியன்று கைது செய்து அவரிடம் இருந்த செல்ஃபோனையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

Also Read: ”பாலியல் துன்புறுத்தலை மூடி மறைத்தாலும் போக்சோ பாயும்” - தாம்பரம் காவல் ஆணையர் ரவி கூறுவது என்ன?