India

நடக்கக் கூடாது என எண்ணியது நடந்தேவிட்டது; மீட்பு பணியில் தெளிவான திட்டமிடல் தேவை - தினகரன் ஏடு தலையங்கம்!

"இந்திய மாணவர்களை உக்ரைனில் இருந்து பாதுகாப்பாக மீட்பதற்கு தெளிவான திட்டமிடல் வேண்டும்" என்ற ராகுல் காந்தியின் கூற்றை சுட்டிக்காட்டி தினகரன் நாளேடு ”நடந்தே விட்டது” என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டியிருக்கிறது.

அதன் விவரம் பின்வருமாறு:-

”பிப்.24ம் தேதி தொடங்கிய போர் தினம் தினம் உக்கிரம் அடைந்து வருகிறது. உக்ரைன் மீது உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது ரஷ்ய படை. பதிலடி கொடுக்கப்பட்டாலும், ரஷ்ய ராணுவம் முன்னேறி வருகிறது. போர் என்றால் எந்த காலத்திலும் அழிவுதான். ஆனால் உக்ரைனில் அதிக எண்ணிக்கையில் இந்திய மாணவர்கள் படித்து வருவதும், அங்கு நடக்கும் பெரும் மோதலும் இந்தியாவில் குக்கிராமம் வரை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எந்த அபாயம் நடக்கக்கூடாது என்று எல்லாரும் வேண்டுதல் வைத்தார்களோ அந்த துயரம் தற்போது நடந்து விட்டது. ஆம்.. கார்க்கிவ் நகரில் ரஷ்ய ராணுவம் நடத்திய ஷெல் தாக்குதலில் இந்திய மாணவர் பலியாகிவிட்டார்.

கர்நாடகவை சேர்ந்த நவீன் சேகரப்பா என்ற இந்திய மாணவர் கார்கிவ் நகரில் குண்டு வெடிப்பில் சிக்கி உயிரிழந்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகம் டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. இதுதான் இப்போது உச்ச கட்ட பதற்றத்தை இந்தியர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில் தமிழக மாணவர்கள் பல ஆயிரம் பேர் உள்பட சுமார் 16,000 இந்திய மாணவர்கள் இன்னும் உக்ரைனில் சிக்கித் தவிக்கின்றனர். இந்திய தூதரகம் மாணவர்களை கீவில் உள்ள ரயில் நிலையத்திற்குச் செல்லுமாறு கூறியது.

அங்கு மக்களை மேற்குப் பகுதிக்கு அழைத்துச் செல்ல உக்ரைனால் சிறப்பு வெளியேற்ற ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆனால் உக்ரைன் அதிகாரிகள் அவர்களை ரயிலில் ஏற அனுமதிக்கவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. இதனால் உக்ரைன் எல்லையில் உள்ள ஹங்கேரி, போலந்து, ருமேனியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் சிக்கித்தவிக்கும் வேளையில் கர்நாடகா மாணவர் நவீன் சேகரப்பா பலியாகி இருப்பது பீதியை ஏற்படுத்தி உள்ளது. ரஷிய தாக்குதல் தொடங்கியதில் இருந்து பல மாணவர்கள் நிலத்தடி பதுங்கு குழிகள், மெட்ரோ நிலையங்களில் பதுங்கியிருக்கிறார்கள். பலர் உணவு, குடிநீர் இல்லாமல் உயிர் பயத்தில் தவித்து வருகிறார்கள்.

Also Read: உக்ரைனில் இந்திய மாணவர் உயிரிழப்பு.. ரயில் நிலையம் சென்றபோது குண்டுவீச்சில் பலி.. யார் இவர்?

இதுவரை 8,000 இந்தியர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுவிட்டதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்தாலும், ரஷ்ய ராணுவம் அதிக தாக்குதல் நடத்தும் உக்ரைனின் கிழக்குப்பகுதியில் ஏராளமான இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளனர். இதனால் அவர்கள் உக்ரைன் எல்லையை கடக்க முடியாமல் திண்டாடுகிறார்கள். எங்கு செல்வது, எப்படி செல்வது, எந்த இடத்தில் தாக்குதல் இல்லை, எப்போது செல்வது என்பது தெரியாமல் பலர் நடந்தே எல்லைகளை நோக்கி செல்கிறார்கள்.

இந்திய அரசும் முடிந்த அளவுக்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறுவது போல்,’ மாணவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கு தெளிவான திட்டமிடல் வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு நிமிடமும் விலை மதிப்பு மிக்கது’. இதுதான் இன்றைய அவசரம். உக்ரைனில் தவிக்கும் நமது மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட வேண்டும். போர் பதற்றம் தணிந்து அங்கு அமைதி திரும்ப வேண்டும். இந்தியா எப்போதும் விரும்புவது இதைத்தான்.”

இவ்வாறு தினகரன் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: உக்ரைன் - ரஷ்யா போர்.. பங்கு சந்தையில் நஷ்டம்.. ஆராய்ச்சி மாணவர் தூக்கிட்டு தற்கொலை - பின்னணி என்ன?