India

“விமானப் போக்குவரத்தை அதிரவைக்கும் 5G சேவை - விபத்து ஏற்பட வாய்ப்பு?” : ‘டிராய்’ கூறிய விளக்கம் என்ன ?

உலகம் முழுவதும் 5G சேவையை அறிமுகம் செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதன் முதலாக அமெரிக்காவில் சில தினங்களுக்கு முன்பு 5G சேவை அறிமுகம் செய்யப்பட்டது.

இதனால் விமான விபத்து ஏற்படுதற்கான வாய்ப்பு இருந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அன்றைய தினம் அமெரிக்காவிற்கு வரக்கூடிய இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.

5G அலைக்கற்றையால் விமானங்களின் கருவிகளின் இயக்கத்தை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக கருதப்பட்டதன் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. பின்னர் இந்த சேவையால் விமானங்களுக்கு ஆபத்து ஏற்படாது என கூறப்பட்ட பிறகே மீண்டும் விமானச் சேவை தொடங்கப்பட்டது.

இந்நிலையில், 5G சேவையில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டது தற்போது உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. இதையடுத்து 5G சேவையால் விமான விபத்து ஏற்பட வாய்ப்பு இல்லை என டிராய் தலைவர் வகேலா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், அமெரிக்காவில் 5G சேவைக்கான அலைக்கற்றைக்கும், விமானங்களுக்குமான அலைக்கற்றை இடைவெளி மிகவும் குறைவாக உள்ளது. இதனால் 5ஜி சேவை துவங்கும் போது அன்றைய தினம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.

இந்தியாவின் 5ஜி செல்போன் அலைக்கற்றை வரிசை, 3300 - 3670 மெகாஹெட்சுக்கு இடையே செயல்படும். எனவே, விமானத்தின் அலைக்கற்றைக்கும் 5ஜி அலைக்கற்றைக்கும் இடையே 530 மெகாஹெட்ஸ் இடைவெளி இருக்கிறது. இதனால், இரண்டுக்கும் இடையே இணைப்புகள் ஏற்பட்டு, விமானங்களில் குளறுபடி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் கிடையாது. இருப்பினும், இது பற்றி மேலும் விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் 5G சேவை இரண்டு ஆண்டுக்குள் அமலுக்கு வரக்கூடும். மேலும் , 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம், இந்தாண்டு இறுதியில்தான் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Also Read: “கெஞ்சி பெறும் யாசகப் பொருளல்ல.. ரத்தம் சிந்தி பெறவேண்டிய உரிமையே விடுதலை” : நேதாஜி பிறந்தநாள் பகிர்வு !