India

“கொரோனா தீவிரம்.. தற்காலிக மருத்துவமனைகளை ஏற்படுத்துங்கள்” : மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை!

உலகம் முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருவதால் தற்காலிக மருத்துவமனைகளை அமைக்குமாறு மாநிலங்களை ஒன்றிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் வெகுவாக அதிகரித்து வருகிறது. ஒமைக்ரான் தொற்று பரவலும் இந்தியாவில் வேகமெடுத்துள்ளது.

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று 1,431 ஆக அதிகரித்துள்ளது. இதனால், பல்வேறு மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

இந்நிலையில் ஒன்றிய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார செயலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கும் சூழலில், அதனை சமாளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், கோவிட் கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் சிகிச்சை அளிப்பதற்கு தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். தற்காலிக சிகிச்சை மையங்களை அமைக்க வேண்டும். வீட்டு தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்க சிறப்பு குழுக்களை ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் அக்கடிதத்தில், மாநிலத்தில் உள்ள அனைத்து சுகாதார வசதிகளிலும் தேவையான மருத்துவப் பொருட்கள், ஆக்சிஜன் இருப்பு மற்றும் மருந்துகள் போதுமான அளவு கிடைப்பதை மாநிலங்கள் தொடர்ந்து மதிப்பாய்வு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “அங்கயாவது சிக்னல் கிடைக்குதானு பார்ப்போம்” : செல்போன் டவரில் ஏறிய நபரால் கரூரில் பரபரப்பு!