India

இதனால் தான் விபத்து ஏற்பட்டதா? - பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விபத்து ஏற்பட்ட உடனேயே மீட்பு பணிகளை தமிழ்நாடு அரசு துரிதமாக மேற்கொண்டது. மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குன்னூருக்கு நேரடியாகச் சென்று முப்படை தலைமைத் தளபதி உள்ளிட்ட உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், குன்னூரில் இருந்து உயிரிழந்தவர்களின் உடல்கள் டெல்லி கொண்டு செல்லப்பட்டது. அங்குப் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து ராணுவ மரியாதையுடன் பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேரின் உடல்களுக்கும் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்து குறித்து ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையில் முப்படை விசாரணை மேற்கொண்டது. இந்த குழு விபத்து நடந்த பகுதிக்கு வந்து விசாரணை செய்தனர்.

பின்னர் விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்தான அறிக்கை ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என விசாரணைக்குழு தெரிவித்தது. இந்நிலையில், விமானியின் தவறுதலால், நிலப்பரப்பில் மோதி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

Also Read: இராணுவ மரியாதை - 17 பீரங்கி குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி.. முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடல் தகனம்!