இந்தியா

இராணுவ மரியாதை - 17 பீரங்கி குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி.. முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடல் தகனம்!

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின்ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உடல்களுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.

இராணுவ மரியாதை - 17 பீரங்கி குண்டுகள் முழங்க  இறுதி அஞ்சலி.. முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடல் தகனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் நேற்று முன்தினம் முப்படை தலைமை தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து 13 பேரின் உடல்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் விமானம் மூலம் உயிரிழந்தவர்களின் உடல்கள் டெல்லி கொண்டு செல்லப்பட்டது. அங்குப் பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். மேலும் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து இன்று வீட்டில் வைக்கப்பட்டிருந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அரவது மனைவி மதுலிகா ராவத் ஆகியோர் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் காலை முதலே அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், பிபின் ராவத் மற்றும் மனைவி மதுலிகா ராவத் ஆகியோர் உடல்கள் காமராஜ் மார்க் வழியாக டெல்லி கன்டோன்மென்ட் மாயானத்திற்கு ராணுவ வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது சாலையிலிருந்த பொதுமக்கள் தேசியக் கொடி ஏந்தி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பிறகு, மயானத்தில் வைக்கப்பட்டிருந்த இருவர் உடலுக்கும் அதிகாரிகள் இறுதி மரியாதை செலுத்தினர். மேலும் இவர்களது இரண்டு மகள்களும் அஞ்சலி செலுத்தினர். இந்த இறுதி நிகழ்ச்சியில், பிரிட்டன், பிரான்ஸ் தூதர்கள் மற்றும் இலங்கை, பூட்டான், நேபாளம், வங்கதேசம் ஆகிய நாட்டின் ராணுவ தளபதிகள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து, ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முப்படை ராணுவ உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து இருவரது உடலும் தகன மேடையில் ஒன்றாக வைக்கப்பட்டது. பிறகு அவர்களது இரண்டு மகள்களும் இறுதி சடங்கு செய்தனர். பிபின் ராவத்தின் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடி அவரது மகள்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தாய், தந்தையின் உடலுக்கு மகள்கள் தீமூட்டினர்.பிறகு,17 குண்டுகள் முழங்க பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உடல்கள் தகனம் செய்யப்பட்டது.

banner

Related Stories

Related Stories