India

அவர் சாப்பிட்டு போனதுக்கு எனக்கு எதுக்கு 14,000க்கு பில்? - ம.பி., ஆளுநர் வருகையால் அப்செட்டான இளைஞர்!

மத்திய பிரதேசத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற வீட்டிற்கான சாவியை ஆளுநரே வழங்கியதற்காக பயனாளியிடம் கிராம நிர்வாகம் 14000 ரூபாய் கேட்ட சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

விதிஷா மாவட்டத்தில் உள்ள கிராமவாசி புத்ராம் என்பவருக்குதான் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் அரசாங்கம் சார்பில் சிமெண்ட் வீடு கட்டித் தரப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புத்ராமிடம் வீடு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

அதுவும் மாநில ஆளுநரான மங்குபாய் சி படேலே நேரடியாக புத்ராமின் புதிய வீட்டுக்குச் சென்று சாவியை வழங்கியதோடு அவரது புது வீட்டில் நடந்த புதுமனை புகுவிழாவிலும் பங்கேற்றிருக்கிறார். இதனால் மிகவும் பூரிப்படைந்திருக்கிறார் புத்ராம்.

ஆனால், ஊராட்சி நிர்வாகத்தினரால் அந்த பூரிப்பெல்லாம் காற்றோடு கரைந்துச் சென்றிருக்கிறது. அது என்னவெனில், ஆளுநரின் வருகைக்காக ஊராட்சி நிர்வாகத்தினர் சார்பில் மின் விசிறி மற்றும் புதிதாக அலங்கரிக்கப்பட்ட கதவுகள் பொருத்தப்பட்டிருக்கிறது.

ஆளுநரின் வருகைக்கு பின்னர் புத்ராமின் வீட்டில் பொருத்தப்பட்ட மின் விசிறி, கதவுகளை அகற்றிச் சென்ற ஊராட்சி நிர்வாகத்தினர் அதற்காக செலவு செய்யப்பட்ட ரூ.14 ஆயிரத்தை புத்ராமிடம் கொடுக்க வேண்டும் என கூறியிருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த புத்ராமை பெரும் சோகம் சூழ்ந்தது.

மேலும் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் சமையல் கேஸ் இணைப்பும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் ஆறு மாதங்களாகியும் புத்ராமிற்கு கேஸ் இணைப்பு வழங்கவில்லை. இதுபோக, ஆளுநரின் வருகைக்காகதான் கதவும் ஃபேனும் பொருத்தப்பட்டது என முன்பே கூறியிருந்தால் வேண்டாம் என தவிர்த்திருப்பேன் என NDTVக்கு அளித்த பேட்டியில் புத்ராம் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு தொடர்பாக அம்மாநில காங்கிரஸார் இடையே கடுமையான எதிர்ப்பும் கண்டனங்களும் எழுந்த நிலையில், மத்திய பிரதேச நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் பூபேந்திர சிங், விருந்தினர் வந்ததால் இவ்வாறு அலங்கரித்திருக்கிறார்கள். ஆனால் அதற்கு காசு கேட்டது தவறு. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.