India

திருமணம் செய்து கொள்வதாக 26 கைம்பெண்களிடம் ரூ. 2.5 கோடி மோசடி: பலே ஆசாமி போலிஸில் பிடிபட்டது எப்படி?

மும்பை தானே பகுதியைச் சேர்ந்த கைம்பெண் ஒருவர் மறுமணம் செய்து கொள்வதற்காக வரன் தேடிவந்துள்ளார். இதற்காக மேட்ரிமோனியில் பதிவு செய்திருந்தார். இவரின் தகவல்களைப் பார்த்த புதுச்சேரியைச் சேர்ந்த பிரிஜித் தயால் காலித் என்பவர் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

மேலும் அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் காலித் கூறியுள்ளார். இதனால் இருவரும் நேரில் சந்தித்து நெருக்கமாகப் பழகி வந்துள்ளனர். இந்நிலையில், "தனக்கு பாரீஸில் உணவு விடுதி ஒன்று இருந்தது. இதை விற்றுவிட்டேன். இந்த பணத்தை இந்தியாவிற்குக் கொண்டு வர ரிசர்வ் வங்கி அனுமதிக்கல்விலை. தற்போது எனக்கு நிதி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. எனவே பணம் கொடுத்து உதவினால் நான் இரண்டு மடங்காகத் திருப்பி கொடுத்துவிடுகிறேன்" என அந்த பெண்ணிடம் காலித் தெரிவித்துள்ளார்.

இதை நம்பிய அந்தப் பெண் ரூ.16.8 லட்சம் பணத்தைக் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிக் கொண்டு காலித் தலைமறைவாகிவிட்டார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்தப் பெண் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் உதவியைக் கொண்டு காலித்தை போலிஸார் மும்பை வரவைத்து கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், இந்த பெண்ணைப் போன்றே 26 கைம்பெண்களிடம் ரூ.2.5 கோடி வரை முறைகேடு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து மேலும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: வாய்ப்பு கேட்டு வந்த மல்யுத்த வீரருக்கு அடி உதை; உ.பி. பாஜக எம்பியின் செயலால் கொதித்த சக வீரர்கள்!