India

உ.பி சாமியார் நரேந்திர கிரி மர்ம மரணம்.. சீடருக்கு தொடர்பு.. 8 பக்க கடிதத்தால் சர்ச்சை!

உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள பாகம்பரி மடத்தைச் சேர்ந்த அகில் பார்திய அகாரா பரிஷத் தலைவர் மகந்த் நரேந்திர கிரி மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடலை மீட்ட போலிஸார் மரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

உயிரிழந்த நரேந்திர கிரியின் அறையில் ஒரு கடிதத்தை போலிஸார் கைப்பற்றினர். அதன் அடிப்படையில் முக்கிய சீடர்களில் ஒருவரான ஆனந்த் கிரி மற்றும் சீடர்கள் சந்தீப் திவாரி, அதயா திவாரி ஆகிய 3 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

சமீபத்தில், நரேந்திர கிரியின் சீடரும் யோகா குருவுமான ஆனந்த கிரியுடன் அவருக்கு மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, அகாடா பரிஷத் மற்றும் பாகம்பரி மடத்திலிருந்து ஆனந்த் கிரி வெளியேற்றப்பட்டார்.

அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாகச் சாடிக்கொண்டனர். ஆனந்த் கிரி, குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு அகாடாவில் உள்ள சர்ச்சைகள் குறித்துக் கடிதங்களை அனுப்பியதோடு, மடத்தின் நிலங்கள் தனியாருக்கு விற்கப்படுவதாகக் குற்றம்சாட்டினார்.

சமீபத்தில் அகில பாரத அகாடா பரிஷத் என்ற போலி ட்விட்டர் கணக்கிலிருந்து பல சர்ச்சைக்குரிய ட்வீட்கள் பதிவிடப்பட்டன. அது குறித்து, நரேந்திர கிரி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்நிலையில்தான், நரேந்திர கிரியின் மரணம் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனந்த் கிரியின் நடவடிக்கைகளில் நரேந்திர கிரி அதிருப்தியில் இருந்ததாகவும், இந்த கொலையில் ஆனந்த்திற்கு தொடர்பு இருக்கலாம் என்றும் போலிஸார் சந்தேகிக்கின்றனர்.

ஆனால் மடத்திலிருந்து தன்னை நீக்குவதற்காக தனக்கு எதிராக சதி நடப்பதாகவும், வேண்டுமென்றே தன்னைச் சிக்கவைத்திருப்பதாகவும் ஆனந்த் கிரி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இந்த மர்ம மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை மேற்கொள்ளவேண்டும் எனக் குரல்கள் எழுந்துள்ளன.

Also Read: அதானி துறைமுகத்தில் ரூ.21,000 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்... மோடியின் தயவுடன் போதைப்பொருள் கடத்தல்?