India

136 கோடி மக்கள் கொண்ட நாட்டில் வெறும் 47 மனநல மருத்துவமனைகள்தானா? - ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் அதிரடி ஆணை!

மதுரையை சேர்ந்த ராஜா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். சிறையில் உள்ள கைதிகள் கொலை உள்பட பல்வேறு வழக்குகளில் கைதாகி சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

சென்னை மனநல அமைப்பு மட்டுமே சிறைவாசிகளுக்கு மனநல சிகிச்சை அளிக்கும் மையமாக உள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு, திருச்சி மத்திய சிறை அல்லது மதுரை மத்திய சிறையில் மனநல சிகிச்சை வழங்கும் சிறப்பு மருத்துவ வசதி, மனநல ஆலோசகர், மனநல சிகிச்சையில் பயிற்சி பெற்ற சமூக ஆர்வலர், செவிலியர், மருந்தாளுநர் ஆகியோரைக் கொண்ட சிறப்பு மனநல சிகிச்சை அமைப்பை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், 90 மில்லியன் இந்தியர்களில் 7.5 சதவீதம் பேர் மனரீதியான பாதிப்புகளை சந்திக்கின்றனர் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இந்தியாவிற்கு அடுத்த நிலையில் சீனாவும், அமெரிக்காவும் உள்ளன. கடந்த 2020ஆம் ஆண்டின் முடிவில் 20 சதவீத இந்தியர்கள் மனம் சார்ந்த பிரச்னையால் அவதிப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

56 மில்லியன் இந்தியர்கள் மன அழுத்தத்தாலும், 38 மில்லியன் இந்தியர்கள் அதிக பதற்றத்திற்கும் ஆளாகின்றனர். 150 மில்லியன் இந்தியர்களுக்கு மனநல பிரச்னைகளில் இருந்து உதவி தேவைப்படுகிறது. 13 முதல் 17 வயதிற்கு உட்பட்ட 9.8 மில்லியன் இளைஞர்கள் மன அழுத்த பாதிப்பில் இருந்து மீள வேண்டியுள்ளது என பெங்களுரூ நிம்கான்ஸ் மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் 47 மனநல மருத்துவமனைகள் உள்ளன. 136 கோடி மக்கள் தொகையைக் கொண்ட நாட்டில் 47 மருத்துவமனைகள் என்பது போதுமானதல்ல. நாடு முழுவதும் மனநல மருத்துவமனைகளை அதிகரிக்க வேண்டும். மனநல மருத்துவர்கள், உளவியல் நிபுணர்கள், குழந்தை நல ஆலோசகர்கள் அதிகளவில் பற்றாக்குறையில் உள்ளனர்.

முதுகலை மருத்துவ படிப்பை அதிகரிப்பதன் மூலம் கூடுதல் மருத்துவர்களை உருவாக்க முடியும். வெளிநோயாளியாகவே பலரும் சிகிச்சை பெறும் நிலையில், ஒவ்வொரு தாலுகா மருத்துவமனைகளிலும் மனநல சிகிச்சையளிக்க வேண்டும். மனநல சுகாதார சட்டப்படி, மனநல சிகிச்சை இன்சூரன்ஸ் திட்டத்தில் இருக்க வேண்டும். சாதாரண மக்களும் இன்சூரன்ஸ் மூலம் மனநல சிகிச்சை பெறுவதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும். கர்நாடகாவில், மனநல சிகிச்சை முறை டிஜிட்டல் முறையில் கண்காணிக்கப்படுகிறது. இதை ஒன்றிய அரசும், மாநில அரசும் பின்பற்ற வேண்டும்.

உலச சுகாதார நிறுவன ஆய்வின்படி, மனநலம் மற்றும் மன அழுத்தத்தால் அதிகம் பேர் பாதித்துள்ள இந்தியாவில் ஒன்றிய அரசு அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். இதற்கென ஒருங்கிணைந்த திட்டத்தை தயாரித்து அரசுகள் உரிய சிகிச்சையளிக்க வேண்டும். சிகிச்சை பெற்றோருக்கு மறுவாழ்வும், அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகளும் மேற்கோள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

Also Read: 30 நாட்களுக்குள் இறந்தால்தான் கொரோனா மரணம்: ஒன்றிய பாஜக அரசின் புது விதியால் கடுப்பான மக்கள்!