India

"ஒரே நேரத்தில் 100 நாய்கள் விஷம் வைத்து கொலை' : கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம் - காரணம் என்ன?

கர்நாடகா மாநிலம், பத்ராவதி கிராமத்தில் நாய்கள் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ளதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கிராமம் முழுவதும் போலிஸார் சோதனை செய்தனர்.

இதில், நூற்றுக்கும் அதிகமான நாய்களின் உடல்கள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பிறகு கால்நடை மருத்துவர்களை வரவழைத்து நாய்கள் இறந்ததற்கான காரணத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் இதேபோன்று வேறு இடங்களிலும் நாய்கள் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், "கிராம பஞ்சாயத்து அலுவலர்கள் இந்த கொடூர சம்பவத்தைச் செய்துள்ளனர். இறந்த நாய்களிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை கால்நடை மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். விஷம் வைத்து நாய்கள் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. மேலும் உயிருடனும் நாய்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்" எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து கிராம பஞ்சாயத்து அலுவலர்கள் கூறுகையில், "இந்த சம்பவங்களுக்கும், எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நாங்கள் நாய்களைப் பிடிக்கவோ, கொலை செய்யவோ யாருக்கும் உத்தரவிடவில்லை. போலிஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம்தான் கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்திற்குட்பட்ட கிராமத்தில் 30க்கும் அதிகமான குரங்குகள் கொலை செய்யப்பட்ட நிலையில், தற்போத 100க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “யூனிஃபார்ம் இல்லைனா நிர்வாணமாக வாங்க” : மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய தலைமையாசிரியர்- பெற்றோர்கள் அதிர்ச்சி!