India

தவறுதலாக செலுத்தப்பட்ட தடுப்பூசியால் சிறுவன் பாதிப்பு : பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் நடந்த அவலம்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதை அடுத்து மாநில அரசுகள் பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும், 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் 16 வயது சிறுவனுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், மொரேனா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கமலேஷ் குஷ்வாசா. இவரது மகன் பல்லு. இந்த சிறுவனுக்குச் சனிக்கிழமையன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஊசி செலுத்திய சில நிமிடங்களிலேயே, சிறுவன் வாயிலிருந்து நுரை தள்ளி மயங்கி விழுந்துள்ளார்.

இதனால், தடுப்பூசி முகாமில் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது, பல்லுவின் ஆதார் அட்டையை பரிசோதித்தபோதுதான் அவருக்கு 16 வயது என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து சிறுவனின் பெற்றோரிடம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர். ஆனால் சிறுவனின் பெற்றோர் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டிற்குச் சென்றுள்ளனர். பின்னர், இது குறித்து அறிந்த சுகாதார அதிகாரிகள் சிறுவனின் வீட்டிற்கு மருத்துவக்குழு ஒன்றை அனுப்பிவைத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து சுகாதார அதிகாரி ஏ.டி.சர்மா கூறுகையில், சிறுவனுக்கு எவ்வாறு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் சிறுவனுக்கு வலிப்பு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Also Read: லாரியில் கட்டிவைத்து சாலையில் இழுத்து சென்ற கொடூரம் : பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் பழங்குடியினர் கொடூர கொலை!