India

"நாங்கள் விடைபெறுகிறோம்"... வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட பள்ளி தாளாளர், மனைவி: காரணம் என்ன?

ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கர்ணதி சுப்ரமணியம், மனைவி ரோகிணி. இந்த தம்பதியினர் கடந்த நான்கு ஆண்டுகளாக கோயிலகுந்தலா பகுதியில் தனியார் பள்ளியை நடத்தி வந்தனர்.

இந்த தம்பதியினர் பள்ளியின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூபாய் இரண்டு கோடிவரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் கொரோனா தொற்றால் பள்ளியை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், கடனை அடைப்பதில் இவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடனுக்கான வட்டி தவணையையும் கட்ட முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த தம்பதியினர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இதையடுத்து இவர்களது காரில் இருந்தவாறே நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் விடைபெறுவதாக அழுதுகொண்டே வீடியோ எடுத்து, அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். பிறகு இவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

இவர்களின் வீடியோவை பார்த்த உறவினர்கள் இவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இது பற்றி தகவல் அறிந்த போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Also Read: "கருக்கலைப்பு குறித்து முடிவெடுக்கும் உரிமை பெண்களுக்கு உண்டு" : கேரள உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!