India

“2 முறை வீரதீர செயல்களுக்கான உயரிய பதக்கம் பெற்று IPS அதிகாரி சாதனை” : யார் இந்த ஹரிபாலாஜி?

காவல்துறையில் மிகவும் சிறப்பாக வீரதீர செயல்கள் புரிபவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தன்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் ‘வீரதீர செயலுக்கான போலிஸ் பதக்கம்’ (Police Medal for Gallantry) வழங்கி கௌரவிப்பது வழக்கம்.

இவ்விருதினை பெறுவது காவல்துறையில் மிகவும் அரிதான மற்றும் பெருமைக்குரிய சாதனையாக கருதப்படுகிறது. இந்நிலையில் இந்தாண்டு இந்த அரிதான விருதினை மகாராஷ்டிரா மாநிலத்தில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணிபுரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஹரிபாலாஜி பெற்றுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் ஹரிபாலாஜி. முன்னதாக யு.பி.எஸ்.சி (UPSC) தேர்வு தயாரிப்பின் போது சென்னையில் உள்ள ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றிக் கொண்டே தயார் செய்து வந்தார். 2013ஆம் ஆண்டில் யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்று மகாராஷ்டிரா மாநிலத்தில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பொறுப்பேற்று, பால்கர் மாவட்டத்தில் 6 மாதங்கள் பயிற்சி பணி செய்தார்.

பின்னர் பீட் மாவட்டத்தில் உதவி எஸ்.பியாக சுமார் இரண்டு வருடங்கள் பணியாற்றினார். இந்தியாவில் அதிக அளவில் நக்சல் ஊடுருவல் உள்ள மாவட்டங்களில் ஒன்றான கட்சிரோலி மாவட்டத்தில் கூடுதல் எஸ்.பியாக (காவல் கண்காணிப்பாளராக) இரண்டரை ஆண்டுகள் பணியாற்றி நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கினார். இவர் கடந்த இரண்டு வருடங்களாக அமராவதி மாவட்டத்தின் எஸ்.பி-யாக பணி செய்து வருகிறார்.

இவர் கட்சிரோலியில் பணியில் இருந்தபோது நடந்த என்கவுன்டர் கதை:

கடந்த மே 2017 முதல் ஜூலை 2019 வரை கட்சிரோலியில் ஹரிபாலாஜி பணியில் சேர்ந்த நாளன்றே, போலிஸ் வாகனத்தில் வெடிகுண்டு வெடித்ததில் ஒரு போலிஸ்காரர் கொல்லப்பட்டார். ஹரிபாலாஜி கட்சிரோலியில் சி -60 (கமாண்டோ 60) என்ற சிறப்பு நக்சல் எதிர்ப்பு இயக்கப் படையை வழிநடத்தி வந்தார். அவர் நக்சல் எதிர்ப்பு இயக்க பொறுப்பாளராக இருந்த காலத்தில், சுமார் 60 என்கவுன்டர்கள் நடந்தன, அதில் சுமார் 74 நக்சல்கள் வீழ்த்தப்பட்டனர்.

2018 இல் மட்டும் சுமார் 50 நக்சல்கள் வீழ்தப்பட்டனர் . இந்த முயற்சியை அப்போதைய ஒன்றிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி என்று புகழ்ந்தனர்.

அதனைத் தொடர்ந்து, 2018 இல் நடந்த ஒரு ஆபரேஷனில் இரண்டு நக்ஸல்களை வீழ்தியதற்காக 2021 குடியரசு தினத்தன்று PMG - முதல் பதக்கம் வழங்கப்பட்டது. இரண்டாவது பதக்கம் இப்போது 2021 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று வழங்கப்படுகிறது.

2019 இல் அபூஜ்மட் (abujmadd) எனும் அடர்ந்த காடுகளில் ஒரு ஆபரேஷன் நடந்தது. அபூஜ்மட் இந்தியாவில் நக்சல்களின் தலைமையகமாக கருதப்படுகிறது மற்றும் அனைத்து மூத்த நிலை நக்சல் தலைவர்களும் அங்கு மறைந்துள்ளனர். பொதுவாக, போலிஸ் படையினர் இந்த பகுதிக்குள் நுழைய அஞ்சும் நிலை இருந்தது.

இந்நிலையில், நக்சல்களின் ஆதிக்கத்தை தடுக்க, சுமார் 200 காவல்துறையினரின் பலத்துடன் படையை இவர் வழிநடத்தினார். இதனையடுத்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் இரண்டாவது முறையாக இவருக்கு மதிப்புமிக்க POLICE MEDAL FOR GALLANTRY வழங்கி கவுரவித்துள்ளது.

ஐ.பி.எஸ் ஹரிபாலாஜி இதுவரை பெற்ற விருதுகள்:

கடந்த 2014ஆம் ஆண்டில் ஒன்றிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் இருந்து “SWORD OF HONOUR FOR BEST OUTDOOR PROBATIONER " மற்றும் "BEST ATHELETE AWARD” விருதுகளைப் பெற்றார். இதில், BEST ATHLETE AWARD தேசிய போலிஸ் அகாடமியில் மிகச்சில இந்திய அதிகாரிகளுக்கு மட்டுமே இதுவரை கிடைத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து கடந்த 2018இல் சிறந்த நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான டி.ஜி.பி சின்னம் DGP INSIGNIA வழங்கப்பட்டது. பின்னர் அடுத்தாண்டே, 2019 ல் நக்சல் பாதிப்பு பகுதியில் பணிபுரிந்ததற்காக மகாராஷ்டிரா அரசிடமிருந்து விஷேஷ் சேவா பதக்கம் பெற்றார்.

மேலும், அதிக கிளர்ச்சி பகுதிகளில் வேலை செய்ததற்காக உள்துறை அமைச்சகத்தின் உள் பாதுகாப்பு பதக்கமும், நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் வெற்றிபெற்றதற்கான போலிஸ் பதக்கம் Police Medal for Gallantry(PMG) இரண்டு முறை பெற்றுள்ளார்.

அதுமட்டுமல்லாது, மாராத்தானில் அதிக ஆர்வம் கொண்ட இவர் சமீபத்தில் 72 வது குடியரசு தின விழாவில் 72 கி.மீ அல்ட்ரா மாராத்தானில் பங்கேற்றார். மேலும் பல இளைஞர்கள் மற்றும் மக்களை ஓட இவர் ஊக்குவிக்கிறார். இவருக்கு ஒன்றிய அரசின் விருது இரண்டாவது முறை கிடைப்பது தமிழ்நாட்டுக்கு பெருமை எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Also Read: “திருமணமான ஒரே வருடத்தில் காதல் மனைவியை குத்திக்கொன்ற கணவன்” : விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!