India

வரதட்சணை கொடுமையால் மனைவி உயிரிழப்பு: அரசு பணியிலிருந்து கணவரை நீக்கிய கேரள அரசு - குவியும் பாராட்டு!

கேரளாவில் கடந்த மார்ச் மாதம் அரசு பணியில் இருக்கும் கிரண் குமார் என்பவரை மருத்துவ மாணவியான விஸ்மயா திருமணம் செய்து கொண்டார். மகளின் திருமணத்திற்காகப் பெற்றோர் 100 பவுன் நகை, ஒரு ஏக்கர் நிலம், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் உள்ளிட்டவற்றை வரதட்சணையாக வழங்கினர்.

வரதட்சணையாக இவ்வளவு பெற்றும், கிரண் குமார், மனைவி விஸ்மயாவுக்கு வரதட்சணை கொடுமை செய்துவந்தார். இதனால் மனமுடைந்த அவர் ஜூன் 21ஆம் தேதியன்று தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்பு, வரதட்சணையாகக் கொடுக்கப்பட்ட கார் பிடிக்காத காரணத்தால் தனது கணவர் தன்னைக் கண்மூடித்தனமாகத் தாக்கி, தனக்குக் காயம் ஏற்படுத்திய புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். இவரின் தற்கொலை கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கிரண் குமார் கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, கிரண் குமார் போக்குவரத்துறையில் ஊழியராக இருந்தால், இவர் மீது போக்குவரத்துத்துறை விசாரணை நடத்தி வந்தது. 45 நாட்களாக நடைபெற்று வந்த விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து, அவரை அரசு பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆண்டனி ராஜூ தெரிவித்துள்ளார்.

கேரளாவில் வரதட்சணை கொடுமையைத் தடுக்கும் விதமாக, அரசு ஊழியர்கள் 'வரதட்சணை வாங்கவில்லை' என மனைவியின் பெற்றோரிடத்தில் கையொப்பம் பெற்ற சான்றிதழ்யை சமர்பிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: மீரா மிதுன் விரைவில் கைது? : பட்டியலின மக்களை இழிவுபடுத்திப் பேசியதாக 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!