India

JNU வன்முறை: இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை... தயாநிதி மாறன் கேள்விக்கு ஒன்றிய அரசு அதிர்ச்சி பதில்!

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி முகமூடி அணிந்த கும்பல் ஒன்று பல்கலைக்கழகத்திற்குள் புகுந்து மாணவர்களை இரும்பு ஆயுதங்கள் கொண்டு கொடூரமாகத் தாக்கியது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி நாட்டையே உலுக்கியது.

ஜே.என்.யூ மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் பா.ஜ.கவின் ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பிற்குத் தொடர்பு இருப்பதாகப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் பலர் குற்றம்சாட்டியிருந்தனர். மேலும் இந்தத் தாக்குதல் சம்பவத்திற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கும் தகவல் மாணர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், கடந்த 2020ம் ஆண்டு ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறை தொடர்பாக இதுவரை யாராவது கைது செய்யப்பட்டுள்ளார்களா என நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாகக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இவரது இந்தக் கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய், "ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறைச் சம்பவம் குறித்து டெல்லி போலிஸ் மூன்று வழக்குகள் பதிவு செய்துள்ளது.

மேலும், காட்சிகளின் அடிப்படையில் வன்முறையில் சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளம் காணும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை இந்த வன்முறை குறித்து யாரும் கைது செய்யப்படவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: அம்பலப்பட்ட ‘தினமலர்’... கொங்கு நாடு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஒன்றிய அமைச்சர்!