India

பிணவறை உதவியாளர் பணி- 500 முதுநிலை... 2 ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பம்: மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி!

இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தாக்கத்தாலும், ஊரடங்கு போன்ற அறிவிப்புகளாலும் நாடுமுழுவதும் பல நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர்.

மேலும் கடந்த ஏழு ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் ஒன்றிய அரசு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காததால், அரசு பணியிடங்களை நிரப்பாததாலும் இளைஞர்கள் வேலைகளைத் தேடி வீதி வீதியாக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பிணவறை உதவியாளர் பணிக்கு 8 ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பித்திருப்பது அதிர்ச்சியடையச் செய்துள்ளது. மேலும் மேற்குவங்க மாநிலத்தில் 2019ம் ஆண்டு 6.1 % இருந்த வேலைவாய்ப்பின்மை கொரோனாவால் 17.4%ஆக அதிகரித்துள்ளது. அதாவது ஆறு பேரில் ஒருவருக்கு மட்டுமே வேலை என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள என்ஆர்எஸ் மருத்துவமனையில் காலியாக உள்ள ஆறு பிணவறை உதவியாளர்கள் பணிக்குக் கடந்த டிசம்பர் மாதம் விளம்பரம் செய்யப்பட்டது. இந்த பணிக்கு கல்வித் தகுதியாக எட்டாம் வகுப்பும், வயது வரம்பாக 18 முதல் 40 வயது வரையும், மாதம் ரூபாய் 15 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து இந்த ஆறு காலிப் பணியிடங்களுக்குப் பலர் போட்டிப்போட்டுக் கொண்டு விண்ணப்பித்துள்ளனர். இதில் அதிர்ச்சியான செய்து என்னவென்றால், விண்ணப்பம் செய்தவர்களில் 100 பேர் பொறியியல் பட்டதாரிகள் என்பதுதான்.

மேலும், 500 முதுநிலை பட்டதாரிகளும், 2000 பட்டதாரிகள் என 8 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இதில் மருத்துவமனை நிர்வாகம் 784 பேரை தேர்வு செய்துள்ளது. அவர்களுக்கு ஆகஸ்ட் 1ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்படும். அதன் பிறகு நேர்முகத் தேர்வும், பிணவறைகளில் பணியாற்றியவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிணவறை உதவியாளர் காலிப் பணியிடத்திற்கு பொறியாளர்கள், முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பித்திருப்பது மேற்குவங்க மாநிலத்தின் வேலையின்மையை அம்பலப்படுத்துகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளது.

Also Read: #Pegasus: "ஒன்றிய அரசே... ஒட்டு கேட்பதை நிறுத்து" - ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்த மதுரை எம்.பி!