India

'2 விநாடிகளில் 1 E-Bike’ - ஒரே ஆண்டில் 1 கோடி வாகனங்கள் தயாரிக்க OLA திட்டம் - 1 லட்சம் பேர் முன்பதிவு!

இந்தியாவில் கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஓலா (OLA) நிறுவனம், ரூ.2,400 கோடி மதிப்பில் உலகிலேயே மிகப்பெரிய மின்சார இருசக்கர வாகன தொழிற்சாலையை அமைக்கத் திட்டமிட்டது.

அந்த வகையில், கடந்த ஆண்டு டிசம்பரில் கிருஷ்ணகிரி அருகே 500 ஏக்கர் தொழிற்சாலையை அமைக்க தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத் தொடர்ந்து, 2021 ஜனவரியில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்து, போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தில் 500 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரியில் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த 3 மாதங்களில் முதற்கட்ட கட்டுமானம் நிறைவடைந்து, மின்சார இருசக்கர வாகன உற்பத்தி தொடங்கப்பட உள்ளது.

இந்த தொழிற்சாலையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் 3,000 அதிநவீன ரோபோக்களின் மூலம் வாகன உற்பத்தி மேற்கொள்ளப்பட உள்ளது. ஒவ்வொரு 2 விநாடிக்கும் ஒரு இருசக்கர வாகனம் வீதம் ஆண்டுக்கு ஒரு கோடிக்கும் அதிகமான மின்சார இருசக்கர வாகனங்கள் இங்கு தயாரிக்கப்பட உள்ளன.

மேலும், அந்த மின்சார வாகனங்களுக்கு தேவையான பேட்டரிகளும் இதே ஆலையில் தயாரிக்கப்பட உள்ளன. ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் வகையில் இவை தயாரிக்கப்படும். இதற்கிடையே, 500 ஏக்கரில் அமைந்துள்ள தொழிற்சாலையில், 100 ஏக்கர் அளவில் மரங்கள் வளர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், 499 ரூபாய்க்கு முன்பணம் செலுத்தி ஓலா மின்சார இருசக்கர வாகனத்தை முன்பதிவு செய்ய அந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பை அடுத்து, 1 லட்சத்துக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “தெற்காசியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதே அரசின் இலக்கு”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!