India
"மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று" : ஒன்றிய அமைச்சர் அதிர்ச்சி தகவல்!
இந்தியாவில் கடந்த பிப்ரவரியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பேரழிவை ஏற்படுத்தியது. இந்த அலையில் நாடு கடந்த ஆறு மாதங்களாக சிக்கித் தவித்த பிறகு தற்போதுதான் படிப்படியாகத் தொற்று குறைந்து வருகிறது. கொரோனா தொற்றால் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் கொரோனா தொற்று குறைந்துவந்த நிலையில் ஊரடங்குகளில் தளர்வுகளை அறிவித்து வருகின்றன மாநில அரசுகள். இருந்த போது சில மாநிலங்களில் கொரோனா தொற்று குறையாமல் மீண்டும் அதிகரித்து வருகிறது. மேலும் பல மாநிலங்களில் உருமாறிய டெல்டா பிளஸ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை பரவல் துவங்கி விட்டதோ என்ற அச்சமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கேரளா, மகாராஷ்டிரா, அருணாசல பிரதேசம், திரிபுரா, ஒடிசா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளதால், இம்மாநிலங்களுக்கு ஆய்வுக்குழுவை ஒன்றிய அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது. இந்தக் குழுவில் மருத்துவர் மற்றும் பொதுச் சுகாதார நிபுணர் என இரண்டு நபர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இது குறித்து ஒன்றிய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீண் பவார் கூறுகையில், "நாட்டில் குறைந்து வந்த கொரோனா தொற்று சில மாநிலங்களில் மீண்டும் அதிகரித்து வருகிறது. இம்மாநிலங்களுக்கு ஆய்வு செய்ய ஒன்றியக்குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழுவினர் கொரோனா பரிசோதனைகள், தடுப்பு நடவடிக்கைகள், ஆம்புலன்ஸ் வசதி, வென்டிலேட்டர்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்வார்கள்.
மாநில அரசுகள் கூறும் கருத்துக்களையும் ஒன்றிய அரசு கவனத்துடன் கேட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா பரவல் குறித்துத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தொற்றைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கும். தொற்று அதிகரித்து வருவது கவலையளிக்கிறது" எனத் தெரிவித்தார்.
Also Read
-
“திமுக என்றுமே ஒரு ஆக்க சக்தியாகவே திகழும்”: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் அட்டகாசம் : பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் த.வெ.க-வினர்!
-
”இயற்கையின் ரகசியம்.. நீலகிரியில் அரிய வகை பறக்காத ஈ கண்டுபிடிப்பு.. ஆச்சரியத்தில் ஆழ்ந்த மக்கள்!”
-
அடுத்தடுத்து வெளிவரும் த.வெ.க நிர்வாகிகளின் மோசடி : ரூ.15 கோடி ஏமாற்றம்!
-
”தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மூன்றாம் இடம்.. ஆளுநரின் அஜெண்டாவிற்கு தலையாட்டிய விஜய்” : முரசொலி விமர்சனம்!