India

"என் மகன் நாட்டுக்காக உயிரிழந்துள்ளான்... இழப்பீடு வேண்டாம்”: டெல்லி முதல்வரிடம் கூறிய தந்தை!

டெல்லியில் உள்ள ஜி.டி.பி மருத்துவமனையில் இளம் மருத்துவரான அனாஸ் முஜாகித் கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சைப் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் கடந்த மே 9 ம் தேதி கொரோனாவால் அனாஸ் முஜாகித் உயிரிழந்தது மருத்துவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,"மறைந்த டாக்டர் அனாஸ் டெல்லியில் கொரோனா பரவத் தொடங்கிய காலத்திலிருந்து ஜி.டி.பி மருத்துவமனையில் மக்களுக்குக் கடுமையாக உழைத்து வந்தார். அனாஸ் போன்ற பல கொரோனா வீரர்கள் டெல்லி மக்களுக்கு உதவுவதில் முன்னணியில் உள்ளனர்.

அனாஸ் போன்றவர்களால் தான் டெல்லி அரசாங்கத்தால் கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராட முடிகிறது" என அனாஸ் முஜாகித் மரணம் குறித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

முன்னதாக, கொரோனா சிகிச்சை அளிக்கும் பணியில் மருத்துவர்கள் இறந்தால் அவரது குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் உதவி வழங்கப்படும் என டெல்லி அரசு அறிவித்து இருக்கிறது. அதன்படி, மருத்துவர் அனாஸ் வீட்டிற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரடியாகச் சென்று அவரது தந்தையைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் முதல்வர், அனாஸின் தந்தை முஜாஹித் இஸ்லாமிடம் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். அப்போது, முஜாஹித் இஸ்லாம் அதை வாங்க மறுத்துவிட்டார்.

"நாட்டுக்காக சேவை செய்து மரணம் அடைந்திருக்கிறான் என் மகன். கடமையை செய்த அவனுடைய உயிருக்கு இழப்பீடு வாங்க என்னால் முடியாது. இந்த பணத்தை நான் வாங்கமாட்டேன்" என முதல்வரின் முகத்துக்கு நேராக, கம்பீரமாக சொன்னார். இவரும் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், “எனக்கு இன்னும் இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருக்கிறார்கள். அவர்களையும் நாட்டு மக்களுக்கு சேவை செய்யவே தயார் படுத்தி வருகிறேன். இதைவிட எனக்கு எந்தப் பெருமையும் தேவையில்லை” என்று முஜாஹித் இஸ்லாம் கூறியுள்ளார்.

முஜாஹித் இஸ்லாமின் இந்தச் செயலைப்பார்த்து முதல்வரும் உடன் இருந்தவர்களும் பேச்சிழந்து நின்றனர். பின்னர் முதல்வர் கெஜ்ரிவால், ஒரு மகத்தான இந்தியரை சந்தித்ததில் மகிழ்ச்சி என நெகிழ்ச்சியுடன் கூறிவிட்டு அங்கிருந்து திரும்பினார்.

Also Read: அளவிட முடியாத வேகத்தில் பயணித்து வியப்பில் ஆழ்த்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - முரசொலி புகழாரம்!