India

555 சிறுவர்களை கூட்டமாக அடைத்து வைத்து பயிற்சி... மோடியின் மாநிலத்தில் காற்றில் பறந்த கொரோனா விதிமுறைகள்!

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாகப் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புக்கு விலக்கு அளிக்கப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் கொரோனா விதிமுறைகளை மீறி 500க்கு மேற்பட்ட மாணவர்களுக்குப் பயிற்சி மையம் ஒன்றில் பாடம் கற்றுக் கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம், ராஜ்கோட் மாவட்டம், ஐஸ்டான் நகரைச் சேர்ந்தவர் ஜெய்சுக் சங்கல்வா. இவர் ஜவஹர் நவோதயா வித்யாலயா மற்றும் பாலச்சாடி சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வுகளில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்குப் பயிற்சி மையம் மற்றும் விடுதி நடத்திவருகிறார்.

குஜராத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா விதிகளை மீறி ஜெய்சுக் சங்கல்வா 555 மாணவர்களுக்குத் தனது பயிற்சி மையத்தில் பாடம் எடுத்துக் கொண்டிருப்பதாக போலிஸாருக்கு சிலர் ரகசியத்தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து போலிஸார், ஜெய்சுக் சங்கல்வாவின் பயிற்சி மையத்தைச் சோதனை செய்தபோது 10 வயதிற்குட்பட்ட 555க்கும் மேற்பட்ட சிறுவர்கள் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளி இல்லாமல் கூட்டமாக அமர வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு போலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பின்னர் சிறுவர்களை மீட்ட போலிஸார் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். மேலும் விதிமுறைகளை மீறி பயிற்சி மையம் நடத்திய ஜெய்சுக் சங்கல்வா போலிஸார் கைது செய்துள்ளனர்.

Also Read: கொரோனாவுக்கு இதுவரை 1.15 லட்சம் சுகாதார பணியாளர்கள் பலி... அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட WHO!