India

“தண்ணீர் கூட இல்லாமல் 3 மணி நேரம் அலைக்கழிப்பு” : யோகி அரசின் அலட்சயத்தால் கதறிய உ.பி பா.ஜ.க எம்.எல்.ஏ!

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் இந்தியா சிக்கித் திணறி வருகிறது. குறிப்பாக டெல்லி, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து கிடைக்கும் தகவல்கள் அச்சத்தையே ஏற்படுத்துகின்றன.

உத்தர பிரதேச மாநிலத்தை ஆளும் முதல்வர் ஆதித்யநாத்தின் தவறான கொரோனா நடவடிக்கையாலும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டாலும், படுக்கை வசதி கிடைக்காததாலும் மக்கள் கொத்துக்கொத்தாக மடிந்து வருகின்றனர். இதைத் தடுப்பதற்கான நடவடிக்கையை எடுக்காமல் யோகி அரசு வேடிக்கை பார்த்து வருகிறது.

இந்நிலையில், தனது மனைவிக்கு உணவு மற்றும் தண்ணீர் கொடுக்காமல் மூன்று மணி நேரம் தரையில் படுக்க வைத்ததாக பா.ஜ.க எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், பிரோசாபாத்தின் ஜஸ்ரானாவைச் சேர்ந்தவர் பா.ஜ.க எம்.எல்.ஏ ராம்கோபால் லோதி. இவரது மனைவி சந்தியா லோதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவரை ஆக்ராவில் உள்ள எஸ்.என் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது மருத்துவமனையில் இடம் இல்லை எனக் கூறி அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்துள்ளனர்.

இதையடுத்து ராம்கோபால் லோதி, ஆக்ரா நீதிபதியிடம் உதவி கேட்டுள்ளார். பிறகு அவரது மனைவிக்கு மருத்துவமனையில் இடம் கிடைத்துள்ளது. ஆனால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 24 மணி நேரம் ஆகியும் மனைவியின் உடல் நிலை குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும், ஒரு எம்.எல்.ஏவின் மனைவிக்கே சரியான கவனிப்பு கிடைக்காதபோது சாதாரண மனிதனுக்கு என்ன நேரிடும் என அஞ்சுவதாகவும் கூறி, ராம்கோபால் லோதி சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ராம்கோபால் லோதிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு, கடந்த மே 7ம் தேதி தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “கொரோனா நோயாளிகளின் சடலங்களை கங்கையில் வீசிச் சென்ற அவலம்” : பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் நிகழும் கொடுமைகள்!