India

விடிய விடிய போராடி 22 பேரின் உயிரை மீட்ட சோனு சூட்... கொரோனா பேரிடரில் ஒரு நெகிழ்ச்சிக் கதை!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபல நடிகர் சோனு சூட், உடனடியாக ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்பாடு செய்து வழங்கி 22 பேரின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம் நெகிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் நாடுமுழுவதுமுள்ள மக்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். மோடி அரசு கடந்தாண்டு கொரோனா ஊரடங்கின்போது மக்களைக் கைவிட்ட நிலையில், தன்னார்வலர்களும், அரசியல் கட்சிகளும், சமூக நல அமைப்புகளும் மக்களுக்கு உதவின.

நடிகர் சோனு சூட், புலம்பெயர் தொழிலாளர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோருக்கு கோடிக்கணக்கில் செலவழித்து உதவி செய்தார். தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை அனுப்பும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் பெங்களூருவில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டதால் சோனு சூட் மற்றும் அவரது அணியினர் இரவு முழுவதும் அலைந்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். சோனு சூட்டின் உதவியால் 22 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த ஆய்வாளர் சத்யநாராயணன் என்பவர் சோனு சூட்டின் அறக்கட்டளைக்கு அழைத்து அராக் மருத்துவமனையில் போதுமான ஆக்சிஜன் இல்லையென்றும், ஏற்கெனவே இதனால் அங்கு 2 பேர் இறந்துவிட்டதாகவும், அவசரமாக ஆக்சிஜன் தேவை என்றும் உதவி கோரியுள்ளார்.

இதையடுத்து, உடனடியாகக் களத்தில் இறங்கிய சோனு சூட் குழுவினர், ஒரு ஆக்சிஜன் சிலிண்டரை முதற்கட்டமாக ஏற்பாடு செய்துகொடுத்தனர். நள்ளிரவே தங்கள் தொடர்பில் இருப்பவர்கள் அனைவரையும் தொடர்புகொண்டு, அவசர நிலையை எடுத்துக்கூறி உதவி கேட்டுள்ளனர்.

அடுத்த சில மணி நேரங்களில் 15 ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்பாடு செய்து மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதன் மூலம் 22 கொரோனா நோயாளிகளின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசியுள்ள நடிகர் சோனு சூட், “எங்களுக்கு அழைப்பு வந்ததும் அதைச் சரிபார்த்து சில நிமிடங்களில் வேலையைத் தொடங்கிவிட்டோம். ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்பாடு செய்யவேண்டும் என்பது மட்டுமே அந்த இரவு முழுவதும் எங்கள் குழுவின் எண்ணமாக இருந்தது. தாமதமாகியிருந்தால் பலர் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்திருப்பார்கள்.

பல உயிர்களைக் காப்பாற்ற உதவிய அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன். எனது குழுவின் இதுபோன்ற வேலைகள்தான் இன்னும் என்னை உழைக்க உந்தித் தள்ளுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு சிரமப்படும் ஏழை மக்கள் பலருக்கும் இதுபோல சோனு சூட் உதவி செய்து வருவது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஆக்சிஜன் இன்றி சாகும் மக்கள்... பசுக்களுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டர் சோதனை... இதுதான் கொரோனா நடவடிக்கையா யோகி?