India

"ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஏற்படும் மரணங்கள் இனப்படுகொலைக்குச் சமம்" : அலகாபாத் நீதிமன்றம் காட்டம்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இறப்பு விகிதமும் தொடர்ந்து அதிகரித்தே வருவது இந்தியாவிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா நோயாளிகள் அதிகரித்தே வருவதால் பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் படுக்கைக்கும், ஆக்சிஜனுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லி, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களிலிருந்து வெளியாகும் செய்திகள் ஒவ்வொரு நாளும் அச்சத்தையே ஏற்படுத்துகிறது.

மேலும், ஆக்சிஜன் கிடைக்காமல் இறப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. பா.ஜ.க ஆளும் மாநிலங்களான உத்தர பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் சுகாதார கட்டமைப்பு இல்லாததால் கொரோனா நோயாளிகள் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் இறப்பது இனப்படுகொலைக்குச் சமமானது என அலகாபாத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடு இருப்பதாக பல்வேறு பொதுநல வழக்குகள் தொடுக்கப்பட்ட நிலையில் அலகாபாத் நீதிமன்றம் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கின் விசாரணையின் போது நீதிபதிகள் கூறுகையில், "ஆக்சிஜன் தட்டுப்பாட்டால், மருத்துவமனைகளில் நோயாளிகள் இறப்பது எங்களுக்கு வலியைத் தருகின்றது. இது குற்றச்செயல், இனப்படுகொலைக்குச் சற்றும் குறைந்ததல்ல. நாம் எப்படி நம் மக்களை இப்படிச் சாக விடலாம். அதுவும் விஞ்ஞானம் இவ்வளவு முன்னேற்றம் அடைந்த நிலையில் இருதய மாற்று அறுவை சிகிச்சை, மூளை அறுவை சிகிச்சையெல்லாம் வெற்றிகரமாக நடைபெறும்போது இதில் நாம் இப்படி அசட்டையாக இருக்கலாமா?

ஆக்சிஜன் பற்றாக்குறை மரணங்கள் குறித்து லக்னோ, மீரட் நிர்வாகம் உடனடியாக விசாரிக்க வேண்டும். அதுகுறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். லக்னோ, மீரட் வழக்கறிஞர்கள் அடுத்த விசாரணையில் நேரில் ஆஜராக வேண்டும்" என நீதிபதிகள் கடும் உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.

Also Read: உ.பியில் படுக்கை வசதி இன்றி உயிரிழப்பு.. கொரோனாவால் பலியானவரின் உடலை ஆட்டோவில் எடுத்துச் செல்லும் அவலம்!