தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்புத் திட்டமான "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மகாவீர் ஜெயின் பவன் திருமண மண்டபத்தில் இன்று (15.7.2025) நடைபெற்ற முகாமினை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டு மனுக்களை அளிக்க வந்த பொதுமக்களுடன் கலந்துரையாடி, தீர்வுகளை வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களின் கீழ் பொதுமக்களின் குறைகளை வீட்டிற்கே வந்து கேட்டறிந்து தீர்வு காணும் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமினை, கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் இன்று தொடங்கி வைத்தார். "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் ஜூலை 15 முதல் நவம்பர் 2025 வரை அனைத்து மாவட்டங்களிலும் மொத்தம் 10,000 முகாம்கள் நடைபெறவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் நகர்புறப் பகுதிகளில் 3,768 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 6,232 முகாம்களும் நடைபெற உள்ளன. இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்பட உள்ளன. அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க, மருத்துவ முகாம்களும் நடத்தப்பட உள்ளன.
இத்திட்டத்தின் கீழ், தன்னார்வலர்கள் 7.7.2025 முதல் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகச் சென்று, முகாம் நடைபெறும் நாள். இடம் குறித்த விவரங்கள், அங்கு வழங்கப்படவுள்ள பல்வேறு அரசு துறைகளின் திட்டங்கள்/ சேவைகளை விவரித்து, அவற்றில் பயனடைவதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தெரிவிப்பதோடு தகவல் கையேட்டினையும், விண்ணப்பத்தினையும் வழங்கி வருகின்றனர். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்குச் சென்று, விண்ணப்பத்தினை பெற்று, பூர்த்தி செய்து தங்கள் விண்ணப்பத்தினை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சியில் முதற்கட்டமாக 15.07.2025 முதல் 14.08.2025 வரை “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் 109 முகாம்கள் நடைபெறுகிறது. இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.
சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, எரிசக்தித்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை உள்ளிட்ட 13 அரசுத்துறைகள் மூலம் மக்களிடமிருந்து மனுக்கள் பெற்று உரிய பதிவுகளை மேற்கொண்டு அதற்கான ஒப்பமும் வழங்கப்பட்டது. முகாமிற்கு வருகை தந்த பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், சிறப்பு மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது.
மேலும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் இந்த முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்து வழங்கினர்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மகாவீர் ஜெயின் பவன் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற முகாமினை பார்வையிட்டு மனுக்களை அளிக்க வந்த பொதுமக்களுடன் கலந்துரையாடி, தீர்வுகளை வழங்கினார்.