India

“மோடியின் புகழ் பிம்பம் விரைவில் முடிவுக்கு வரும்” - நிர்மலா சீதாராமனின் கணவர் கடும் சாடல்!

கொரோனா விசயத்தில் பிரதமர் மோடியின் புகழ் பிம்பம் அனைத்தும் ஒரு நாடகக் கவர்ச்சி போல் வெகு சீக்கிரத்தில் முடிந்து விடும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமணின் கணவரும், பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர் கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்தும் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:

கொரோனாவின் இரண்டாவது அலையால் நாடு மருத்துவ நெருக்கடியில் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கிறது. மக்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது என்பதனை மறந்து, பொறுப்பற்று செயல்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டில் நிறைய குடும்பங்கள் வருமானத்தையும், உறவுகளையும் இழந்து நிற்கின்றன.

மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நோயாளிகளாலும், பரிசோதனைக்கு வந்து குவியும் மாதிரிகளாலும் ஒட்டுமொத்த மருத்துவத் துறையும் திணறிக் கொண்டிருக்கிறது. மருத்துவமனையின் வாயில்களில் நீளும் வரிசைகள், மக்களின் மரண ஓலங்கள், எரியும் பிரேதக் குவியல்கள் போன்றவற்றைப் பார்க்கும், அரசியல் தலைவர்களும், மதத் தலைவர்களும் கொஞ்சமும் அக்கறையின்றி உள்ளனர்.

பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள், எதிர்க்ட்சி தலைவர்கள் மக்களைக் கூட்டித் தேர்தல் மாநாடு நடத்தினர். மற்றொரு புறம் கும்பமேளாவில் லட்சக்கணக்கானவர்கள் கூடினர். அவர்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் ஒன்றையும் பின்பற்றவில்லை. கொரோனா பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதற்கு மத்திய அரசின் செயல்பாடுகள் போதுமானதாக இல்லை.

மக்களிடமிருக்கும் எந்தக் கேள்விக்கும் மத்திய அரசு பதில் சொல்லத் தயாராக இல்லை. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அறிவுப்பூர்வமான ஆலோசனைகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சரின் பொறுப்பற்ற பதில்கள், மத்திய அரசின் மெத்தனப் போக்கைக் காட்டுகிறது. மீடியாக்களின் தலைப்புச் செய்திகளில் இடம் பிடிப்பதில் இருக்கும் ஆர்வம், கள நிலவரத்தைச் சமாளிப்பதிலோ, எதிர்கொள்வதிலோ மத்திய அரசுக்கு இல்லை.

இதிலிருந்து அரசின் இயலாமை தெளிவாகத் தெரிகிறது. பிரதமர் மோடியின் பேச்சுத் திறன், புகழ், பிம்பம் அனைத்தும் ஒரு நாடகக் கவர்ச்சி போல் வெகு சீக்கிரத்தில் முடிந்து விடும். வெளிப்படையான, நிர்வாகத் திறனுள்ள, மனிதாபிமான அடிப்படையிலான அரசும், ஆட்சியாளரும் மட்டுமே வரலாற்றின் ஏடுகளில் நிலைத்திருப்பார்கள். இந்தியாவின் இந்த நிலைக்குக் காரணம் பொறுப்பற்ற மத்திய அரசின் செயல்பாடே தவிர வேறொன்றும் இல்லை.

இவ்வாறு பரகலா பிரபாகர் பேட்டியளித்துள்ளார்.

Also Read: மக்கள் உயிரை சுரண்ட கார்ப்பரேட்டுக்கு குத்தகைக்குவிட்ட மோடி அரசு: ஆக்சிஜனுக்கு அல்ல ஆளுமைக்கே பற்றாக்குறை