India

“உலக அளவில் கொரோனா பாதிப்பில் மீண்டும் முதலிடம்” : கொரோனாவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன ?

இந்தியாவில் குறைந்துவந்த கொரோனா தொற்று, கடந்த பிப்ரவரி மத்தியில் இருந்து கொரோனா வைரஸ் 2வது அலை வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா, பஞ்சாப், தமிழகம், கேரளா, டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக மோசமாக உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 93 ஆயிரத்து 249 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 513 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி 93 ஆயிரம் கொரோனா பாதிப்பு பதிவாகியிருந்தது.

இதுவே அந்த ஆண்டில் உச்சபட்ட பதிவாகும். ஆனால் தற்போது இதையும் கடந்து ஒரு லட்சத்தை கொரோனா வைரஸ் நெருங்கி வருவது மத்திய, மாநில அரசுகளை அச்சமடையச் செய்துள்ளது. மீண்டும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா தினசரி பாதிப்பில் மீண்டும் இந்தியா முதலிடம் வந்திருப்பது மக்களைப் பீதியடைய வைத்துள்ளது.

மேலும், மகாராஷ்டிரா மாநிலத்தையே கொரோனா வைரஸ் மிரட்டி வருகிறது. இங்கு கடந்த 24 மணி நேரத்தில் 49 ஆயிரத்து 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த முடியாததால் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் முடிவில் முதல்வர் உத்தவ் தாக்ரே இருக்கிறார்.

அதேபோல், தமிழ்நாட்டிலும் கடந்த இரண்டு நாட்களாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு பதிவாகிவருகிறது. குறிப்பாகச் சென்னையில் கொரோனா ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் ஒரு லட்சத்தை நெருங்கி வரும் வேலையில், பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்திருப்பதால் மத்திய, மாநில அரசுகள் கொரோனாவை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

Also Read: “மே இறுதி வரை கொரோனா தாக்கம் நீடிக்கும்” : தடுப்பு நடவடிக்கையில் ஆமை வேகத்தில் இருக்கும் மோடி அரசு !