India

“தன்னாட்சியானது மத்திய பல்கலைக்கழகங்கள் : இடஒதுக்கீட்டு வேரில் வெந்நீர் ஊற்றிய மோடி அரசு” - தீக்கதிர்

மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பதவியேற்றதிலிருந்து இடஒதுக்கீடு கொள்கையின் வேரில் வெந்நீர் ஊற்றுவதையே வேலையாகக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட, பட்டியல், பழங்குடி வகுப்பினர் கல்வி வாய்ப்பு பெறுவதை தடுப்பதற்காகவே பல்வேறு மறைமுக நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

அதன் ஒரு பகுதியாகவே புதிய கல்விக் கொள்கை என்பதை மத்திய அரசு கொண்டு வந்தது. மாநிலங்களின் அதிகாரப் பட்டியலில் இருந்த கல்வியை பொது பட்டியலாக்கி ஏற்கெனவே மாநிலங்களின் உரிமைகளும், அந்தந்த மாநில மக்களின் கல்வியும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது.

இந்நிலையில் இட ஒதுக்கீடு என்றாலே எட்டிக்காயாக கசக்கும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் அதை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட முடியாததால் கொஞ்சம் கொஞ்சமாக காலி செய்வதற்கான இழிவான யுக்திகளில் ஈடுபட்டிருக்கின்றன. பொதுவாக பிற்படுத்தப்பட்ட, பட்டியல், பழங்குடி வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளை தடுப்பதற்கு என்றே நீட் போன்ற பல்வேறு தேர்வுகள் மற்றும் நிபந்தனைகளை திணித்து வருகின்றன.

உயர் கல்விக்கான உதவித் தொகையை வழங்கிடாமல் இழுத்தடிப்பதால் பல மாணவர்கள் கல்வி பெற முடியாமல் வெளியேறும் நிலை ஏற்பட்டிருக்கிறது. வெமுலா போன்ற சிறந்த மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட கொடுமை நிகழ்ந்தது. இந்நிலையிலேயே மத்திய பல்கலைக் கழகங்களை சட்டத்தின் மூலம் தன்னாட்சி பெற்ற நிறுவனங்களாக ஆக்கியதால் இடஒதுக்கீட்டுக் கொள்கை அமலாவது ஏறத்தாழ இல்லாத நிலையே ஏற்பட்டு உள்ளது.

அதன் வெளிப்பாடுதான் 42 மத்திய பல்கலைக் கழகங்களில் தற்போது உள்ள காலியிடங்கள் 6,074. இவை பிற்படுத்தப்பட்ட, பட்டியல், பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்களின் பணியிடங்களாகும். அப்படியெனில் இது எவ்வளவு அநியாயம். இது சமூக நீதிக்கு இழைக்கப்படும் அநீதி அல்லவா? நாட்டிலுள்ள ஐ.ஐ.எம். நிறுவனங்களில் 60 சதவீதத்திற்கும் மேலான காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

இவை பிற்படுத்தப்பட்ட, பட்டியல், பழங்குடியினர்க்கானவை ஆகும். அதைவிட கொடுமை மத்திய பல்கலைக் கழகங்களில் உள்ள பழங்குடியினர்க்கான பேராசிரியர் பணியிடங்கள் 93 சதவீதம் நிரப்பப்படாமல் உள்ளதாகும். சொல்லப் போனால் 1062 பேராசிரியர்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். இந்த நிலைமை மத்திய ஆட்சியாளர்களால் மாற்றம் பெறும் வாய்ப்பு இல்லை என்பதையே மக்களவையில் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் நிஷாங்க் அளித்த பதிலின் மூலம் தெரியவருகிறது.

இந்த நிலையை மாற்றுவதற்கு பல்கலைக்கழகங்களின் நிர்வாகமே பொறுப்பு என்றும் அவர் தட்டிக்கழித்திருப்பது அதையே உணர்த்துகிறது. சமூக நீதிக் கொள்கையின்பால் வெறுப்புக் கொண்ட பா.ஜ.க. ஆட்சியாளர்களையும், அவர்களுக்கு அடிபணிந்து நடக்கும் தமிழக அ.தி.மு.க. ஆட்சியாளர்களைப் போன்றவர்களுக்கும் வரும் தேர்தலில் தகுந்த பாடம் கற்பிப்பதன் மூலமே இத்தகைய நிலைமாறுவதற்கு வழி ஏற்படும் சமூக நீதி வாழும்.

Also Read: “எதற்குமே நீட் தேவையில்லை என்ற போராட்டக்குரல் ஓங்கி ஒலித்திட வேண்டும்” - தீக்கதிர் தலையங்கம் சூளுரை!