India

பொய் பாலியல் வழக்கால் பாழாய் போன நிரபராதியின் இளமை வாழ்வு: 20 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்த நீதிமன்றம்!

பா.ஜ.க. ஆளக்கூடிய உத்தர பிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான விவகாரங்கள் அன்றாட தலைப்புச் செய்திகளாகிவிட்டது.

இப்படி இருக்கையில், அம்மாநிலத்தின் லலித்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஷ்ணு திவாரி என்ற நபர் மீது பொய்யான பாலியல் புகாரை சுமத்தியதால் அவர் எந்த தவறும் இழைக்காமல் 20 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2000ம் ஆண்டில் விஷ்ணு திவாரி மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டால் அவர் ஆக்ரா சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 23.

விஷ்ணு திவாரியின் குடும்பத்தாருக்கும் அவரது பக்கத்து வீட்டு குடும்பத்தாருக்கும் நில தகராறு இருந்த நிலையில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் ஒருவர்தான் விஷ்ணு மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார். தான் வயலில் வேலை செய்துவிட்டு வீடு திரும்பும்போது தன்னை தாக்கி விஷ்ணு வன்புணர்வு செய்ததாக புகார் அளித்திருக்கிறார்.

இதனையடுத்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது விஷ்ணுவுக்கு எஸ்.சி/எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது. அதன் பின்னர், 2005ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் விஷ்ணு திவாரி செய்த மேல்முறையீடு சுமார் 16 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்திருக்கிறது.

இதற்கிடையே அத்தனை ஆண்டுகளும் சிறையிலேயே தனது வாழ்வை கழித்த விஷ்ணுவின் நன்னடத்தையை கருத்தில் கொண்டு சிறைத்துறை அதிகாரிகள் அவரது வழக்கை தூசி தட்டி எடுத்து மேல்முறையீடு செய்திருக்கிறார்கள்.

அதில், புகாரளித்த பெண் வன்புணர்வு செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரங்களும் மருத்துவ அறிக்கையில் இல்லை. அரசு தரப்பு வாதங்களும் சாட்சியங்களும் பாதிக்கப்பட்ட பெண்ணை விஷ்ணு வாய் பொத்தி தரையில் வேகமாக தள்ளியதாக கூறப்பட்டாலும் அந்த பெண் உடலில் எந்த காயங்களும் தென்படவில்லை. மேலும் சாட்சியங்களின் குறுக்கு விசாரணையில் ஏராளமான முரண்பாடுகளும் இருந்திருக்கின்றன.

இவை அனைத்தும் உறுதி செய்யப்பட்டதால் லலித்பூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து விஷ்ணு திவாரியை விடுதலை செய்வதாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

20 ஆண்டுகளுக்கு விஷ்ணுவுக்கு நீதி கிடைத்தாலும் வெளியே வந்தவருக்கு தான் இழந்த நாட்களும் இளமையும் திரும்ப பெற முடியுமா? இனி அவர் வாழப்போகும் வாழ்க்கையாவது இனிமையாக இருக்குமா? அரசு சார்பில் கட்டாயம் விஷ்ணுவுக்கு உதவிகள் செய்யப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

இந்நிலையில், தனக்கு நிகழ்ந்த கொடுமை குறித்து பேட்டி அளித்துள்ள விஷ்ணு கூறியதாவது, “எனது தந்தை என்மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார்; நான் தான் குடும்பத்தின் மூத்த மகன்; என்னை வழக்கிலிருந்து விடுவிப்பதற்காக பலகோடி பெறுமானமுள்ள எங்களது நிலங்களை சில ஆயிரங்களுக்கு விற்று வழக்கு நடத்தினார்.

ஒரு கட்டத்தில் பணம் அவரிடம் இல்லாமல் போனாலும் நான் நிரபராதி என்பதில் நம்பிக்கையுடன் இருந்தார்; என்னை அடிக்கடி சிறையில் வந்து பார்த்து ஆறுதல் சொல்வார்; திடீரென்று அவர் வரவில்லை; நான்கு ஐந்து மாதங்கள் கழித்து தான் எனது தந்தை இறந்துவிட்டார் என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது; அவரின் இறுதி சடங்கிற்கு கூட செல்லமுடியாமல் போய்விட்டது.

என் அம்மா, தம்பி, அப்பா என எனது குடும்பத்தில் அனைவரும் எங்கள் மீது சுமத்தப்பட்ட பொய் குற்றசாட்டை நினைத்தே இறந்துவிட்டனர். இப்பொழுது ஒரு தம்பி மட்டும் உயிருடன் இருக்கிறார்; அவருக்கும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது;

அரசாங்கம் எனக்கு கொடுத்த 600 ரூபாயை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன்? என் வாழ்வே நிலைகுலைந்து போய்விட்டது; 20 வருட சிறைவாசத்தில் மிஞ்சியது கையில் இருக்கும் கொப்பளங்களும், உடைந்துபோன உடம்பும், 600 ரூபாயும் தான்” என கண்ணீர் மல்க கூறியிருக்கிறார்.

Also Read: “2 பெண்களை மணந்து, 10ஆம் வகுப்பு சிறுமியையும் ஏமாற்றி சிதைத்த இளைஞன்” - நெல்லை அருகே அதிர்ச்சி சம்பவம்!