India

"NEET, JEE, UPSC தேர்வுகள் பணக்காரர்களுக்கு மட்டும்தானா?": தேர்வு முறையில் மாற்றம் கோரும் நவீன் பட்நாயக்!

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கியுள்ளது பா.ஜ.க அரசு. இதனால் ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்புகள் எழுந்து வந்தாலும் நீட் தேர்வை வலுக்கட்டாயமாக நடத்தி வருகிறது பா.ஜ.க அரசு.

இந்நிலையில், காணொலி வாயிலாக நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பேசுகையில், "ஒவ்வொரு ஆண்டும் நீட், ஜே.இ.இ, யு.பி.எஸ்.சி போன்ற தேசிய அளவிலான தேர்வுகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். ஆனால், இந்த தேர்வுகளானது செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகள் மட்டுமே தேர்ச்சி பெறும் வகையில் உள்ளது.

ஆயிரக்கணக்கில் பணம்கொடுத்து, பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயிலும் மாணவர்களால்தான் இத்தேர்வுகளில் தேர்ச்சி அடைய முடியும் என்ற சூழல் நிலவுகிறது. இத்தேர்வுகளில் திறமைக்கும் பெரிய அளவில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகத் தெரியவில்லை.

நம் நாட்டில் எத்தனையோ திறமையான மாணவர்கள் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். பயிற்சி வகுப்புகளில் சேரும் அளவுக்கு அவர்களுக்குப் பொருளாதார வசதி கிடையாது. அதுபோன்ற மாணவர்களை நாம் புறக்கணிக்கலாமா? இத்தகைய தேர்வு முறைகளால் லட்சக்கணக்கான ஏழை மாணவர்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது. அனைத்துத் தரப்பினருக்கும் சமவாய்ப்பு வழங்கும் விதமாகவும், திறமைக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் நம் தேர்வு முறைகள் மாற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: மருத்துவ மேற்படிப்புகளுக்கான நீட் தேர்வு கட்டணம் உயர்வு : மாணவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய மோடி அரசு!