India

“2019ஆம் ஆண்டு நில ஆர்ஜித சட்டம் விவசாய விளைநிலங்களை கையகப்படுத்தவே கொண்டுவரப்பட்டது” - வில்சன் MP வாதம்!

தமிழக அரசின் 2019 ஆம் ஆண்டு நில ஆர்ஜித சட்டம், விவசாய விளைநிலங்களைக் கையகப்படுத்தவே கொண்டு வரப்பட்டுள்ளது என்பதால் அதனை ரத்துசெய்து உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார்.

சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட 2015 ஆம் ஆண்டு நில ஆர்ஜித சட்டத்துக்கு உயிரூட்டும் நோக்கத்தில்தான் 2019 ஆண்டு நில ஆர்ஜித சட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. எனவே, தமிழக அரசின் இந்த 2019 நில ஆர்ஜித சட்டம், விவசாய விளைநிலங்களைக் கையகப்படுத்த வழிவகை செய்துள்ளது.

இந்த சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்பதால் அதனை ரத்துசெய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் வில்சன் இன்று உச்சநீதிமன்றத்தில் வாதிட்டார்.

விவசாயிகளைப் பாதிக்கும் இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று திருவள்ளூரைச் சேர்ந்த மோகன் ராவ், சுனிதா, கோவிந்தராஜ் உள்ளிட்ட 55 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழக்கறிஞர் வில்சன் தனது வாதத்தை முன்வைத்தார். வழக்கு அடுத்தகட்ட விசாரணைக்காக பிப்ரவரி 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.