India

“சட்டவிரோத சுவரொட்டி : நன்னடத்தை குறித்து அறிவுரை வழங்குக” - தேர்தல் ஆணைய கூட்டத்தில் தி.மு.க வேண்டுகோள்!

2021ஆம் ஆண்டு நடைபெற இருக்கின்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலையொட்டி, இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம், தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தலைமையில் நேற்று (03.11.2020) சென்னை தலைமைச் செயலக கட்டிடத்தில் நடைபெற்றது.

தி.மு.க சார்பில் கழக அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி எம்.பி அவர்களும்; கழக சட்ட ஆலோசகரும் மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ எம்.பி அவர்களும் கலந்துகொண்டு, வருகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கும்; வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை சரி செய்து சரியான வாக்காளர் பட்டியலை வெளியிடுவதற்கும் உரிய கருத்துக்களை கழகத்தின் சார்பில் எடுத்து வைத்தனர். தலைமைக் கழக வழக்கறிஞர்கள் வி.அருண் மற்றும் ஆர்.நீலகண்டன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

தி.மு.க சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுத்து வைக்கப்பட்ட கருத்துக்களாவன:

* அடையாள அட்டையுடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் குறித்து கழகத்திற்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் மூலமாக தகவல்கள் உரிய நேரத்தில் அளிக்கப்படுவதில்லை. ஆகவே வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து உரிய நேரத்தில், உரிய முறையில் கழகத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் மூலமாக தகவல்கள் கொடுக்க வேண்டும் என்றும்; அதன் அடிப்படையில்தான் கழகத்தின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பாக நிலை முகவர்கள் (BLA-2) வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு, பாக நிலை அலுவலருடன் இணைந்து பணியாற்ற முடியுமென்றும் தெரிவிக்கப்பட்டது.

* வாக்காளர் பட்டியலில் இருந்து ஒரு வாக்காளரின் பெயர் நீக்கம் செய்யப்படும் பொழுது, வாக்காளர் பதிவு அலுவலர்களால், கடந்த காலங்களில் பல்வேறு தவறுகள் செய்யப்பட்டன; இது ஒருவரின் வாக்குரிமையை பறிக்கின்ற வகையில் இருந்தது. பல இடங்களில் மொத்தமாக வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 2019-பொதுத் தேர்தலின்போது ஏற்பட்ட தவறுகள் இதற்கு உதாரணமாகும். ஆகவே எந்த ஒரு வாக்காளரின் பெயரையும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்வதற்கு முன்பு, அது குறித்து முழுமையாக சரிபார்த்து, அரசியல் கட்சிகளின் பாக நிலை முகவர்களுக்கு (BLA-2) தகவல் தெரிவித்து விட்டுத்தான் நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

* மேலும் வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கல், இடமாற்றம் குறித்த படிவங்களை இந்திய தேர்தல் ஆணையத்தினுடைய இணையதளத்திலிருந்து, பதிவிறக்கம் செய்து அதனை அரசியல் கட்சிகளின் பாக நிலை முகவர்கள் பயன்படுத்திக் கொள்வது குறித்த விளக்கம் கோரப்பட்டது. அதேபோல அந்த படிவங்களின் போட்டோ நகல்களைப் பயன்படுத்த முடியுமா என்பது குறித்தும் விளக்கம் கோரப்பட்டது.

* இறந்த நபர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யும் பொழுது, இறப்பு சான்றிதழ் மட்டுமே ஆதாரமாக இணைக்கப்பட வேண்டுமா; ஒருவேளை இறப்புச் சான்றிதழ் இல்லாத நிலையில் அதேபோல இறப்பு பதிவு செய்யப்படாத நிலையில், வேறு எந்த ஆவணங்களை ஆதாரமாகக் காண்பித்து, இறந்த நபர்களின் பெயரை நீக்கம் செய்வது குறித்தும் விளக்கம் கோரப்பட்டது.

* 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தபால் வாக்கினை அளிப்பதற்கு அனுமதி உள்ளதா என்பது குறித்தும் விளக்கம் கோரப்பட்டது.

* மூத்த குடிமக்களிடம் இருந்து அங்கீகரிக்கப்பட்ட நபர்களின் மூலம் தபால் வாக்குகளை சேகரிக்க அனுமதிக்கப்படுமா என்பது குறித்தும் விளக்கம் கோரப்பட்டது.

* அடையாள அட்டையுடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் செய்யப்படும் பொழுது எந்தெந்த வாக்காளர்கள் தபால் வாக்குகளை செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த விவரங்கள் அதில் குறிப்பிடப்படுமா என்றும் அது குறித்த தகவல்களை அரசியல் கட்சிக்கு வழங்கப்படுமா என்பது குறித்தும் விளக்கம் கோரப்பட்டது.

* 25.10.2020ஆம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையும் ஒப்புமைப்படுத்தி, அச்சக முகவரி மற்றும் அச்சிட்டோர் பெயர் இல்லாமல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன; இதற்கு பொறுப்பானவர்களை மறைக்கும் விதமாகத்தான் அச்சக முகவரியும், பெயரும் இல்லாமல் சட்டவிரோதமாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. இது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 153-க்கு எதிரானதாகும். அதேபோல, தமிழ்நாடு திறந்தவெளி இடங்களுக்கான சட்டத்தின் படியும் இது சட்ட விரோதமானது ஆகும். இதுகுறித்து, உரிய சட்ட நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து இருக்கின்ற நிலையில், தேர்தல் வரும் நேரத்தில், இதுபோல சட்டவிரோத சுவரொட்டிகளை ஒட்டுவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் அரசியல் கட்சியினருக்கு நன்னடத்தை குறித்தான உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அனைத்துக்கட்சி கூட்டத்தை தொடர்ந்து அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து, கழகத்தின் சார்பில் எடுத்து வைக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து விளக்கினார். அப்போது, கழக சட்ட ஆலோசகரும் மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ எம்.பி, தலைமைக் கழக வழக்கறிஞர்கள் வி.அருண் மற்றும் ஆர்.நீலகண்டன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

Also Read: “29 ஆண்டுகள் போதும் ஆளுநரே... எழுவர் விடுதலை குறித்து விரைந்து முடிவெடுங்கள்” - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!