India

கூட்டுறவு வங்கிகளை எங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை: ஐகோர்ட்டில் RBI வாதம்

நாடு முழுவதும் கூட்டுறவு வங்கிகளை, ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்தை எதிர்த்து தமிழகத்தைச் சேர்ந்த பழமையான இரு கூட்டுறவுச் சங்கங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளுக்கு பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், அவசர சட்டத்துக்கு மாற்றாக நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டதால், வழக்கில் அவசர சட்டம் என்பதற்கு பதில் சட்டம் என திருத்தம் செய்ய அனுமதி கோரி, வழக்கு தொடர்ந்த இரு கூட்டுறவு சங்கங்கள் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஏற்றுக் கொண்டதுடன், வழக்கில் மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய ஆறு வார அவகாசம் வழங்கி உத்தரவிட்டது. இதற்கிடையில், இந்த இரு மனுக்களையும் அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என, ரிசர்வ் வங்கி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வங்கி நடவடிக்கைகளில் ஈடுபடும் கூட்டுறவு வங்கிகளை முறைப்படுத்தும் வகையில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், முதலீட்டாளர்கள், பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டும் இந்த சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது.

கூட்டுறவு வங்கிகளை முறைப்படுத்த ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் உள்ளதாகவும், கூட்டுறவு சங்கங்களுக்கு ஒவ்வொரு மாநிலத்தில் ஒவ்வொரு விதமான சட்டங்கள் உள்ளதால், வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் கூட்டுறவு வங்கிகளை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதால், இதில் எந்த சட்டவிரோதமும் இல்லை எனவும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. மோசமான நிதி நிலை காரணமாக நாடு முழுவதும் கடந்த 20 ஆண்டுகளில் 430 நகர்புற கூட்டுறவு வங்கிகளுக்கான உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.