India

பொருளாதார விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது - வட்டிக்கு வட்டி விவகாரத்தில் மத்திய அரசு பதில்!

வங்கிக்கடன் தவணைக்கான அவகாச மாதங்களுக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரத்தில் 2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு மட்டும் கூட்டு வட்டி வசூலிப்பதை கைவிட ரிசர்வ் வங்கியுடன் நடத்திய ஆலோசனையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியிருந்தது.

இது தொடர்பாக கடந்த வாரம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனு தாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கட்டுமானம் உள்ளிட்ட பல துறைகள் விடுபட்டுள்ளன. பல முக்கிய பிரச்சினைகளுக்கு அரசு பதிலளிக்கவில்லை.

2 கோடி வரையிலான கடன்களுக்கு மட்டும் கூட்டுவட்டியைத் தள்ளுபடி செய்வதாக அரசு தற்போது கூறினாலும் அதுதொடர்பாக சுற்றறிக்கை எதனையும் வெளியிடவில்லை என்று வாதிட்டனர்.

இதனைத் தொடர்ந்து மத்திய அரசும் ஆர்.பி.ஐ மற்றும் வங்கிகள் இது தொடர்பாக கூடுதல் பதிலை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், வட்டி விலக்கு தொடர்பாக வங்கிகள் வெளியிட உள்ள சுற்றறிக்கை மற்றும் ஆணைகள் தொடர்பாகவும் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில் கூடுதல் துறைகளுக்கு சலுகை வழங்க முடியாது என்று பதில் மனுவில் மத்திய அரசு கூறியுள்ளது. மேலும், பொருளாதார விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடக் கூடாது. அப்படி தலையிட்டால் அது பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

Also Read: “EMI அவகாச காலத்தில் ரூ.2 கோடி வரையிலான கடன் வட்டிக்கு வட்டி செலுத்த வேண்டியதில்லை”: மத்திய அரசு தகவல்!