மம்தா பானர்ஜி
India

“பாஜகதான் பெருந்தொற்று; கொரோனா வைரஸ் அல்ல” - ஹாத்ரஸ் சம்பவத்துக்கு எதிரான பேரணியில் மம்தா பானர்ஜி பேச்சு!

உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த இளம் பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொடூரமாக தாக்கியதால் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண்ணின் உடலைக் கூட அவர்களது பெற்றோர் வசம் ஒப்படைக்காமல் உ.பியின் காவி போலிஸாரே வயல் வெளியில் வைத்து எரித்தது பா.ஜ.க. அரசின் சர்வாதிகாரத்தை ஊர்ஜிதப்படுத்தியுள்ளது.

இதனைக் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் எதிர்க்கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. அவ்வகையில் மேற்கு வங்க மாநிலத்தில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஹாத்ரஸ் கொடூர சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து மிகப்பெரிய பேரணியில் ஈடுபட்டார்.

அதன்பிறகு பேசிய அவர், நாட்டிலே பாரதிய ஜனதா கட்சிதான் பெருந்தொற்றாக உள்ளது. கொரோனா வைரஸ் அல்ல என ஆவேசமாக பேசினார். மேலும், மோடியின் ஆட்சியில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான அட்டூழியங்கள் மிகப்பெரிய தொற்று நோயாக பரவி வருகிறது.

இந்த அக்கிரமங்களுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து இவற்றை முற்றிலும் தகர்த்தெறிய வேண்டும். மத்தியில் இருக்கக் கூடிய அரசு மக்களுக்கு எதிரான அரசாகவே உள்ளது என சாடியுள்ளார்.

மேலும், கொரோனா வைரஸ் பரவலை மத்திய மோடி அரசு கட்டுப்படுத்தாமல் விட்டதால் அது சமூக பரவலாகியிருக்கிறது. இதனால் வீட்டிலேயே பாதுகாப்பாக இருப்பவர்களும் நோய் தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள் எனவும் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Also Read: “மோடி ஆட்சியில் அதிகரித்த கொலை குற்றங்கள்”: நாள்தோறும் 79 பேர் கொல்லப்பட்டதாக ‘NCRB’ அதிர்ச்சி ரிப்போர்ட்