India

மோடி அரசின் நிர்வாக தோல்வி : நடப்பு காலாண்டில் BHEL-லில் ரூ.893.14 கோடி வருவாய் இழப்பு!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு சற்றும் குறையாமல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கொரோனா பாதிப்பில் உலகளவில் இரண்டாவது இடத்தில் இந்தியாவில் இந்தியா உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தோல்வி அடைந்த மோடி அரசு, ஊரடங்கு காலத்தில் பொதுத்துறை நிர்வாகத்தை சிறப்பாக செயல்படத்தவும் தவறிவிட்டது.

அதன் விளைவாக, இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள் பல தனியார் கைகளுக்குச் சென்றுள்ளது. இன்னும் சில நிறுவனங்கள் நஷ்டத்தைக் காரணம் காட்டி தனியாரிடம் கொடுப்பதற்காக நடவடிக்கையில் மோடி அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தியா முழுவதும் இயங்கி வரும் மத்திய அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம் கொரோனா பேரிடரால் 2020 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் ரூ.893.14 கோடியை நிகர இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மத்திய அரசுக்கு சொந்தமான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (பி.எச்.இ.எல்.) தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், 2020 ஜூன் காலாண்டில் பி.எச்.இ.எல். நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் ரூ.893.14 கோடியை நிகர இழப்பாக சந்தித்துள்ளது. சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் அந்நிறுவனத்தின் நஷ்டம் சுமார் 4 மடங்குக்கு மேல் அதிகமாகும்.

2020 ஜூன் காலாண்டில் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.2,086.43 கோடியாக குறைந்துள்ளது. கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, குழுமத்தின் செயல்பாடுகள் மற்றும் காலாண்டுக்கான நிதி முடிவுகளில் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

2019 ஜூன் காலாண்டில் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் ரூ.218.93 கோடியை நிகர நஷ்டமாக சந்தித்து இருந்தது. மேலும், அந்த காலாண்டில் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனம் மொத்த வருவாயாக ரூ.4,673.38 கோடி ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read: தனியார்மயமாக்கலை எதிர்த்து போராட்டம் நடக்கும்போதே, பெல் கம்பெனி பங்குகளை விற்க ஒப்புதல் அளித்த மோடி அரசு!