India

டெல்லி கலவர வழக்கு : பிரசாந்த் பூஷன், சல்மான் குர்ஷித், பிருந்தா காரத் உள்ளிட்டோர் குற்றவாளியாக சேர்ப்பு!

குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக வடகிழக்கு டெல்லியின் மாஜ்பூர், கோகுல்புரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த பிப்ரவரி மாதம் போராட்டம் நடைபெற்றது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வந்திருந்தபோது, பிப்ரவரி 24ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மீது இந்துத்வா கும்பல் வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்தியது.

இந்த வன்முறை சுமார் 32 மணிநேரத்துக்கு நீடித்தது. இதனால் இதுவரை 53 பேர் பலியாகியும், நூற்றுக்கும் மேலானோர் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்றுள்ளனர். 50க்கும் அதிகமான வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. மேலும், இந்துத்வ கும்பலால் வடகிழக்கு டெல்லியின் பெரும் பகுதி சூறையாடப்பட்டதால் நகரம் முழுவதும் மயானம் போன்றே காட்சியளித்து.

இந்நிலையில், மத்திய பா.ஜ.க அரசின் அதிகாரத்தின் கீழ் செயல்படும் டெல்லி காவல்துறை, இந்தக் கலவரத்திற்கு ஆதரவளித்ததாகவும், போராட்டத்தில் ஈடுபட்டோரை தாக்கியதோடு, அவர்கள் மீதே நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் கடுமையாக குற்றம்சாட்டப்படுகிறது. இது தொடர்பான வழக்கு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

அதுமட்டுமல்லாது, டெல்லி கலவரத்தில் போலிஸாரின் பங்கு குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்றும், அந்தக் கலவரம் தொடர்பாக போலிஸார் நடத்திய விசாரணையில் நம்பிக்கையில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவரைச் சந்தித்து மனு அளித்துள்ளனர்.

இந்நிலையில், டெல்லி கலவர வழக்கு தொடர்பாக, 17,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை டெல்லி போலிஸார் தாக்கல் செய்துள்ளனர். அதில், சல்மான் குர்ஷித், பிருந்தா காரத் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக டெல்லி கலவர வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் நீதிபதி முரளிதரர், “டெல்லியில் நடைபெற்ற வன்முறையன்று கலவரத்தை மத்திய, மாநில அரசுகள் கப்படுப்படுத்தாமல் தவறி விட்டன'” என விமர்சித்திருந்தார். அவர் விமர்சனம் மறுநாள் செய்திதாள்களில் வெளியாகுவதற்குள் அன்றைய தினம் இரவே அவர் அதிரடியாக மாற்றப்பட்டார்.

இந்நிலையில், இந்த சம்பவம் பற்றி விசாரித்து வந்த டெல்லி போலிஸார், 17,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை உயர் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தனர். அதில், “குற்றப்பத்திரிக்கையில் உள்ளவர் கடுமையாக தண்டிக்கப்பட்ட வேண்டும். குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டள்ள அனைவரும் கலவரம் நடந்த இடத்திற்கு நேரடியாக சென்று வன்முறையை தூண்டும் விதமாக பேசியுள்ளார்” என கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த குற்றப் பத்திரிகைகளில் உள்ளவர்கள் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் கூறி, காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் போன்ற முக்கிய நபர்களின் பெயர்களும் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.

டெல்லி போலிஸார் திட்டமிட்ட வன்முறையை செய்த இந்துத்வா கும்பல் மீது எடுக்கவேண்டிய நடவடிக்கையை ஜனநாயக முறையில் போராடியவர்கள் மீது எடுப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Also Read: “டெல்லி வன்முறையில் காவல்துறை சதி - முஸ்லிம்கள் மீது நடந்த மனித உரிமை மீறல்கள்” : அதிர்ச்சி ரிப்போர்ட்!