India

“40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி - கொரோனாவால் திணறும் இந்திய பொருளாதாரம்” : மத்திய புள்ளியியல் துறை தகவல்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மேலும் ஊரடங்கு தளர்வுகளுடன் நீடிக்கப்பட்டுள்ளது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் தொழில்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் என தொழில்துறை முழுவதும் பெருமளவு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்தச் சூழலில் தளர்வுகள் அளித்தாலும் நிறுவனங்கள் முழுமையாகச் செயல்படமுடியாத சூழலே உள்ளது. தொடர்ந்து நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் பொருளாதார பாதிப்பு காரணமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 40 காலாண்டுகளில் இல்லாத சரிவை சந்தித்திருப்பதாக மத்திய புள்ளியல் துறை தெரிவித்துள்ளர்.

இந்நிலையில், 2020, ஆகஸ்ட் மாதத்திற்கான தொழிற்துறை உற்பத்தி மதிப்பீட்டு (Estimates of Index of Industrial Production - IIP) விவரங்களை மத்திய புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடப்பு நிதியாண்டின் கடைசி காலாண்டில் நாட்டின் தயாரிப்புத் துறை பின்னடைவை சந்தித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி 23.9 சதவீதம் சரிந்துள்ளது. இதுபோல், உற்பத்தி துறையில் மொத்த மதிப்பு கூட்டு வளர்ச்சி 39.9 சதவீதம் சரிந்துள்ளது.

இதேபோல் உற்பத்தித் துறை 17.1 சதவிகிதம், மின்சாரத் துறை 7 சதவிகிதம், முதன்மை பொருட்கள் துறையின் உற்பத்தி 14.6 சதவிகிதம், சேவைகள் துறைகளில் 47 சதவீதம், கட்டுமான துறையில் 50.3 சதவீதம் என்ற அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதில், விவசாயத்துறை மட்டும் 3.4 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் ரூ.26.90 லட்சம் கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்த மதிப்பு ரூ.35.35 சதவீதமாக உள்ளது. இதன்படி, ஜி.டி.பி 23.9 சதவீதம் சரிந்துள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இது 5.2 சதவீதம் வளர்ச்சி அடைந்திருந்தது என மத்திய அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது கடந்த 40 ஆண்டுகளுக்கும் முன்பு இருந்ததை விட கடும் பின்னடைவு என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “சுங்கக் கட்டண உயர்வு: இது மக்கள் மீதான பொருளாதார வேட்டை” - மத்திய மாநில அரசுகளை சாடும் மு.க.ஸ்டாலின்!