India

“விமானியே எங்கள் உயிரை காப்பாற்றியுள்ளார்” - கோழிக்கோடு விமான விபத்தில் உயிர்பிழைத்தவர்கள் உருக்கம்!

கோழிக்கோடு விமான விபத்தில் உயிர்பிழைத்தவர்கள் அந்த விமானத்தை ஓட்டி வந்த விமானிதான் சமயோசிதமாகச் செயல்பட்டு தங்கள் உயிரைக் காப்பாற்றியதாகத் தெரிவித்துள்ளனர்.

துபாயிலிருந்து இந்தியாவின் கேரள மாநிலம் கோழிக்கோட்டுக்கு வந்த வந்தே பாரத் 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பேர் மரணமடைந்தனர். 100-ம் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

போயிங் – 737 என்ற வகையைச் சேர்ந்த அந்த விமானம் 191 பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களை ஏற்றி வந்தது. அதில் 10 குழந்தைகளும் அடக்கம்.

இதில் உயிர்பிழைத்தவர்கள், வீரம் நிறைந்த விமானியும், விபத்து நடந்த பகுதியில் வசிக்கும் மக்களுமே தங்களை பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றியதாகத் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மற்ற உதவிகள் வரும் முன்னரே விரைந்து செயல்பட்டு புகை, நெருப்பு உள்ளிட்டவற்றையும் பொருட்படுத்தாமல் விமானத்துக்குள் நுழைந்து பயணிகளைக் காப்பாற்றியுள்ளனர்.

இந்த விமானத்தை ஓட்டிவந்தவர் விங் கமாண்டர் தீபக் வசந்த் சாத்தே. அவர் இந்திய விமானப்படையில் போர் விமானியாக 22 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவருக்கு வயது 59. அவருக்கு 1981-ம் ஆண்டு விமானப்படை அகாடமியில் பயிற்சி நிறைவு செய்த போது ’ஸ்வார்ட் ஆஃப் ஹானர்’ என்ற பதக்கம் வழங்கப்பட்டது. இது பொதுவாகப் பயிற்சியில் சிறப்பாக செயல்படும் வீரருக்குக் கொடுக்கப்படும்.

”மிகக் கடுமையாக மழை பெய்துகொண்டிருந்தது. வானிலை மோசமாக இருப்பதாக தரை இறங்கும் முன்பே விமானி எங்களுக்கு எச்சரிக்கை அளித்தார். அவர் இரண்டு முறை பாதுகாப்பாக தரை இறங்க முயற்சி செய்தார். ஆனால் விமானம் கட்டுப்பாட்டை இழந்தது. விமானம் ஓடுபாதையிலிருந்து விலகித் தடுமாறி இரண்டாகப் பிளந்தது. இதில் பலர் உயிர்பிழைத்தது நம்பமுடியாத ஒன்று. பலர் உயிர் பிழைத்திருப்பதற்கு விமானியே காரணம்.” என்று இந்த விமானத்தில் பயணம் செய்த பயணி இப்ராஹிம் தெரிவித்துள்ளார். அவருக்கு லேசான காயங்கள் உள்ளன.

துரதிருஷ்டவசமாக இந்த விபத்தில் விமானி தீபக் சாத்தே உயிரிழந்தார். பயணம் செய்த 191 நபர்களில் 123 பேர் காயமடைந்திருப்பதாகவும், 20 நபர்கள் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ஓடுபாதை ஆபத்து குறித்து 9 வருடங்களுக்கு முன்பே எச்சரித்த நிபுணர் - கண்டுகொள்ளாத விமான போக்குவரத்து துறை?