India

“அமைப்புசாரா தொழிலாளர்களை அரசு கைவிட்டுவிட்டது” - பொருளாதார நோபல் அறிஞர் குற்றச்சாட்டு!

கொரோனா தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில், இந்தியாவில் கொரோனா ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள், பொருளாதார சிக்கல்கள் குறித்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுடன் காணொளிக் காட்சி மூலம் கலந்துரையாடி வருகிறார் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி.

அந்த வரிசையில், நோபல் பரிசு பெற்ற அறிஞர், பொருளாதார பேராசிரியர் முகமது யூனுஸுடன் ராகுல் காந்தி இந்தியப் பொருளாதாரம் குறித்து கலந்துரையாடினார்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, “புலம்பெயர் தொழிலாளர்களே நகரங்களைக் கட்டி எழுப்புகின்றனர். நம் பொருளாதாரமே அவர்களின் மேல் கட்டி எழுப்பப்பட்டதுதான். ஆனால் நாம் அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அளிக்க நாம் போதுமானவற்றைச் செய்வதில்லை” எனக் குறிப்பிட்டார்.

அதை ஆமோதித்துப் பேசிய நோபல் அறிஞர் முகமது யூனுஸ், “நிதி ஒழுங்கமைப்புகள் தவறான விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. சமூகத்தின் பலவீனத்தை கொரோனா வைரஸ் மிக மோசமாக அம்பலப்படுத்தியுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள் நகரங்களில் மறைந்திருக்கின்றனர். கொரோனாவால் அவர்கள் நகரங்களை விட்டு கிளம்ப வேண்டியதாயிற்று. அவர்களுக்கு பொருளாதார உதவிகள் செய்யப்படவில்லை.

மேல்நிலை பொருளாதாரவாதிகள் இவர்கள் தொழிலை ‘அமைப்பு சாரா துறை’என்று அழைக்கின்றனர். பொருளாதாரம் அமைப்புசார்ந்த துறையின் மூலம் மட்டுமே தொடங்குகிறது என்று கருதும் அரசு இவர்களிடமிருந்து விலகி நிற்கிறது.

கொரோனா வைரஸ் நாம் நம் பொருளாதார மாடலை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்துகிறது. பழைய முறைக்கு மீண்டும் செல்வது என்பது தற்கொலைக்குச் சமம். செல்வம் ஓரிடத்தில் குவியாத, வேலையின்மை இல்லாத ஒரு உலகைக் கட்டமைக்க கொரோனா நல்வாய்ப்பை வழங்கியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “பா.ஜ.கவின் மோசடிகளை முறியடித்து நாட்டு மக்கள் ஜனநாயகத்தை காப்பார்கள்” - ராகுல் காந்தி நம்பிக்கை!