India

“மும்பை விமான நிலைய மேம்பாட்டு பணிகளில் ரூ. 750 கோடி ஊழல்” - ஜி.வி.கே ரெட்டி மீது சி.பி.ஐ வழக்கு!

மும்பை சர்வதேச விமான நிலைய மேம்பாட்டு திட்டத்தில் ரூபாய் 750 கோடிக்கு ஊழல் செய்ததாக ஜி.வி.கே குழுமத்தின் தலைவர் ஜி.வி.கே ரெட்டி மற்றும் அவரது மகன் சஞ்சய் ரெட்டி மீது சி.பி.ஐ போலிஸார் இன்று எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.

நாடு முழுவதும் விமான நிலையம், போக்குவரத்து, மருத்துவமனைகள் கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்து பணிகளைக் கையாண்டு வருகிறது ஹைதராபாத்தை தலைமையகமாக கொண்ட ஜி வெங்கட கிருஷ்ண ரெட்டி (GVK) குழுமம்.

மும்பை விமான நிலையத்தின் 50.5 சதவிகித பங்குகளையும் ஜி.வி.கே குழுமம் வைத்திருந்தது. அதன்படி, மும்பை விமான நிலையத்தை ஜி.வி.கே குழுமம் கையாண்டு வருகிறது. இந்த விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள், நவீனப்படுத்துதல் என்று அனைத்துப் பணிகளையும் இந்த நிறுவனமே மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், மும்பை விமான நிலையத்தின் மேம்பாட்டுப் பணிகளில் , ரூபாய் 750 கோடிக்கு ஊழல் நடந்ததாக, ஜி.வி.கே குழுமம் மற்றும் சில அரசு அதிகாரிகள் மீது குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.

கடந்த 2017-2018ஆம் ஆண்டுகளில் விமான நிலையத்தின் மேம்பாட்டுக்கு என ரூபாய் 350 கோடிக்கு ஒன்பது நிறுவனங்களுடன் மும்பை சர்வதேச விமான நிலைய லிமிடெட் ஒப்பந்தம் செய்ததாக கணக்கில் காட்டியுள்ளது. ஆனால், இந்தப் பணிகள் நிறைவேற்றப்படவில்லை எனத் தெரியவந்தது.

மேலும், மும்பை விமான நிலைய லிமிடெட் நிறுவனத்தில் இருந்து கிடைத்த வருமானத்தை கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்து ஜி.வி.கே குழுமம் தனது வேறு நிறுவனங்களுக்கு மாற்றி இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, போலி வேலையாட்கள் ஒப்பந்தங்கள் மூலம் பணம் கையாடல் செய்தது, விமான நிலைய வருமானத்தை தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஜி.வி.கே ரெட்டி அவரது மகன் சஞ்சய் ரெட்டி ஆகியோர் மீது சி.பி.ஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.

Also Read: “ரிசர்வ் வங்கியைத் தொடர்ந்து கூட்டுறவு வங்கி தொகையையும் சுருட்ட மோடி அரசு சதி”- சிபிஐ(எம்) குற்றச்சாட்டு!