India

“இந்திய இராணுவ வீரர்களின் உயிர்த்தியாகம் வீண்போகாது” - பிரதமர் மோடி பேச்சு!

லடாக் எல்லையில் கல்வான் பகுதியில் இந்திய - சீன இராணுவ வீரர்களுக்கு இடையே நடைபெற்ற சண்டையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதன் காரணமாக எல்லைப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா தாக்கம் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி, இன்று இந்தியா - சீனா எல்லை விவகாரம் குறித்துப் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், “கல்வான் பள்ளத்தாக்கில் சீன இராணுவத்துடனான மோதலில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் உயிர்த்தியாகம் வீண்போகாது. இந்தியா அமைதியை விரும்புகிறது. ஆனால், இந்தியாவைத் தூண்டினால் எந்தச் சூழலிலும் தக்க பதிலடி கொடுக்கப்படும்.

நம் தேசத்துக்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் தியாகம் வீண்போகாது என்று மக்களுக்கு உறுதியளிக்கிறேன். இந்தியாவைப் பொறுத்தவரை தேசத்தின் ஒற்றுமை மற்றும் இறையாண்மை மிகவும் முக்கியமானது. இந்தியா எப்போதும் பிரச்னைக்குள் செல்ல முயற்சிக்காது, வேறுபாடுகளைக் களையவே முயற்சிக்கும்'” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்திய வீரர்கள் மீதான தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்க வரும் வெள்ளிக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்தை காணொளிக் காட்சி வாயிலாகக் கூட்ட பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

Also Read: கொரோனா பேரிடரிலும் எல்லையில் தொடரும் போர் பதற்றம் - சந்தேகத்தை கிளப்பும் மோடி அரசின் மௌனம்!