India

“வீட்டு வேலை செய்வோரை இழிவுபடுத்தும் விளம்பரம்” - கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து மன்னிப்பு கேட்ட ‘கென்ட்’!

வீட்டு வேலை செய்யும் பெண்களை இழிவுசெய்யும் வகையில் விளம்பரம் வெளியிட்ட நிறுவனத்துக்கு, சமூகவலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அந்நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த பிரபல குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனமான கென்ட், புதிதாக ரொட்டி தயாரிப்பு மெஷின் விற்பனையை துவங்கியுள்ளது. அதை பிரபலப்படுத்தும் நோக்கில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டது.

அதில், “உங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்ணை ஆட்டா மாவை கையால் பிசைய அனுமதிக்கிறீர்களா? அவரது கைகள் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம்” என்ற வாசகம் ஆங்கிலத்தில் இடம்பெற்றிருந்தது.

இதையடுத்து சமூக - பொருளாதார அடிப்படையில் வீட்டு வேலை செய்வோரை இழிவாகச் சித்தரிப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கென்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ மகேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கென்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியான கென்ட் ஆட்டா & பிரெட் மேக்கரின் விளம்பரம் தற்செயலாக தவறான வகையில் அமைந்துவிட்டது. இந்த சம்பவத்திற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம்.

உணர்வுகளை புண்படுத்தியதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க விரும்புகிறோம். இந்த விளம்பரம் வெளியிடப்பட்டது குறித்து விசாரணை நடத்த இருக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “OBC மாணவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட 11,000 மருத்துவ இடங்கள்” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!