India

“அரசின் எண்ணம் மாறவேண்டும்; நிவாரணமாக ஒரு நபருக்கு ரூ.1,000 வழங்குவது அவசியம்” - நோபல் அறிஞர்கள் யோசனை!

கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, ஒரு நபருக்கு மாதம் ரூ.1,000 வீதம் மத்திய அரசு, உடனடியாக வழங்க முன்வர வேண்டும் என நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி - எஸ்தர் டப்ளோ ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி - எஸ்தர் டப்ளோ தம்பதி, ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் காணொளிக் காட்சி மூலம் உரையாடினர்.

அப்போது பேசிய அபிஜித் பானர்ஜி, “கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பட்சத்தில், பெருமளவில் உற்பத்தி செய்வதற்கு இந்தியா உதவக்கூடும். ஆனால் தடுப்பூசி இல்லாத நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், ஊரடங்கு நீட்டிப்பு தொடரும்.

ஒரு நபருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 நிதி உதவி என்பது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இது அதிகம் என்றால், ஒருவருக்கு 500 வீதம் 5 நபர்கள் கொண்ட குடும்பத்திற்கு ரூ.2,500 கிடைக்கும். இது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இது அனைத்து அவசர தேவைகளுக்கு செலவிடப்படும்.

இந்தியா ஒரு மிகப்பெரிய தேவை அதிர்ச்சியை எதிர்கொள்ளப் போகிறது. அடுத்த ஊரடங்கு மக்களுக்கு சிறந்த ஒன்றாக இருப்பதை நாம் உறுதி செய்யவேண்டும். அதுவே அவர்களை மீட்பதற்கு திறவுகோலாக இருக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.

எஸ்தர் டப்ளோ பேசுகையில், “அரசின் நிவாரணம் தகுதியற்றவர்களுக்கு சென்றுவிடக்கூடாது என்ற மத்திய அரசின் எண்ணம் மாறவேண்டும். கொரோனா சூழ்நிலை மக்களை வறுமை பிடியில் தள்ளக்கூடும் என்பதால் இது அவசியமானது.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: "ஒளி மங்கியதில்லை உதயசூரியன்! - அருந்ததியர் வாழ்வில் ஒளியேற்றிய தி.மு.க!” : பேராசிரியர் சுப.வீரபாண்டியன்